யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ள அண்ணாவின் கொள்ளுப் பேத்தியை தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தார்.
2019-ம் ஆண்டுக்கான யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் அண்ணாவின் கொள்ளுப் பேத்தியான பிரித்திகா ராணி தேர்ச்சி பெற்றுள்ளார். இவர், அகில இந்திய அளவில் 171-வது இடத்தைப் பிடித்துள்ளார். பொறியியல் பட்டதாரியான பிரித்திகா ராணி, யூபிஎஸ்சி தேர்வில் ஆர்வம் கொண்டு, சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்து தற்போது வெற்றி பெற்றுள்ளார். யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ள அவர், ஐ.எஃப்.எஸ் பணியில் இணைய ஆர்வம் கொண்டுள்ளார்.
யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ள அவருக்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அவரை இன்று (ஆக.8) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அண்ணாவின் கொள்ளுப் பேத்தியான ராணியைத் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த மு.க.ஸ்டாலின், அண்ணாவைப் போல் இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டும் வகையில் மென்மேலும் பல உயரங்களை அடைந்திட வேண்டும் என வாழ்த்து மடல் ஒன்றினையும் அவருக்கு எழுதியுள்ளார்.