புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் புதிதாக 268 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,087 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஆக.8) கூறியதாவது:
"புதுச்சேரியில் 924 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 228 பேர், காரைக்காலில் 38 பேர் ஏனாமில் 2 பேர் என மொத்தம் 268 பேருக்குத் (29 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 109 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 43 பேர் ஜிப்மரிலும், 11 பேர் 'கோவிட் கேர் சென்ட'ரிலும், 38 பேர் காரைக்காலிலும், 2 பேர் ஏனாமிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 65 பேர் மருத்துவமனையில் அனுமதிப்பதற்காகக் காத்திருப்பில் உள்ளனர்.
மேலும், புதுச்சேரியில் 3 பேர், காரைக்காலில் 2 பேர் என 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
எல்லப்பிள்ளைச் சாவடியைச் சேர்ந்த 58 வயதுப் பெண் ஏற்கெனவே நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்குக் கடந்த 5 ஆம் தேதி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்து நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முத்தியால்பேட்டை செயின்ட் ரொசாரியோ வீதியைச் சேர்ந்த 57 வயது ஆண் ஏற்கெனவே நீரிழிவு நோய், உயர் ரத்தம் மற்றும் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்குக் கடந்த 27 ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
உருளையன்பேட்டை சுப்பையா நகரைச் சேர்ந்த 78 வயது முதியவர் ஏற்கெனவே நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கண்ணீர் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்குக் கடந்த 27 ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
காரைக்கால் தர்மபுரத்தைச் சேர்ந்த 54 வயது ஆண் நபர் நீரிழிவு நோய் மற்றும் குளிர் காய்ச்சலுடன் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் நேற்று காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று மதியம் உயிரிழந்தார்.
காரைக்கால் மேடு ஆஞ்சநேயர் கோயில் வீதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி உணவுக் குழாய் பாதிப்புடன் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, கடந்த 5 ஆம் தேதி காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.57 சதவீதமாக ஆக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 5,087 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 332 பேரும், ஜிப்மரில் 334 பேரும், 'கோவிட் கேர் சென்ட'ரில் 387 பேரும், காரைக்காலில் 111 பேரும், ஏனாமில் 113 பேரும், மாஹேவில் 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் 559 பேர், ஏனாமில் 48 பேர் என 607 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் மருத்துவமனைகளில் அனுமதிப்பதற்காகக் காத்திருப்பில் உள்ள 65 பேரையும் சேர்த்து 1,953 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 60 பேர், ஜிப்மரில் 15 பேர், 'கோவிட் கேர் சென்ட'ரில் 15 பேர், காரைக்காலில் 13 பேர், ஏனாமில் 6 பேர் என மொத்தம் 109 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,054 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஜிப்மரில் இருந்து 19 பேர் 'கோவிட் கேர் சென்ட'ருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதுவரை 45 ஆயிரத்து 954 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 39 ஆயிரத்து 960 பரிசோதனைகள் 'நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. 409 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளது".
இவ்வாறு மோகன்குமார் தெரிவித்தார்.