கோவை-ஆனைகட்டி சாலையில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளான கார். 
தமிழகம்

கோவை அருகே மரத்தில் கார் மோதி 4 இளைஞர்கள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

மரத்தில் கார் மோதியதில் 4 இளைஞர்கள் உயிரிழந்தனர், ஒருவர் பலத்த காயமடைந்தார்.

கோவை சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த இந்தரேஷ்(22), பூமார்க்கெட் கார்த்திக் ராஜா(22), வடவள்ளி மோகன் ஹரி(23), வடகோவை மணிகண்டன்(22), பிரஜேஷ்(23) ஆகிய ஐவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் நண்பரின் பிறந்த நாளையொட்டி இவர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர். பின்னர், நேற்று அதிகாலை 5 பேரும் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை இந்தரேஷ் ஓட்டியுள்ளார். கோவை-ஆனைகட்டி சாலையில், காளையனூர் பகுதியில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தில் மோதியது. இதில், இந்தரேஷ், கார்த்திக் ராஜா, மோகன் ஹரி, மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பிரஜேஷ், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

4 பேரின் சடலங்கள், பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்தரேஷ் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கார்த்திக் ராஜா ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மோகன் ஹரி தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். பிரஜேஷ் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். விபத்து பற்றி தடாகம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT