தாம்பரத்தில் குடும்ப அட்டை குறைதீர் முகாம் நடைபெறும் இடம் முறையான அறிவிப்பு இல்லாமல் மாற்றப்பட்டது. இதனால் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.
உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் சென்னை முழுவதும் 16 இடங் களில் நேற்று குடும்ப அட்டை குறை தீர் முகாம் நடைபெற்றது. இதில் தாம்பரம் மண்டலத்தில் கிழக்கு தாம்பரம் பாரதமாதா தெருவில் உள்ள ஜெய்கோபால் கரோடியா நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் குறைதீர் முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து நேற்று காலை முகாம் நடைபெறும் பள்ளிக்கு தாம்பரம், அனகாபுத்தூர், மாடம்பாக்கம், செம்பாக்கம், முடிச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் வந்திருந்தனர்.
ஆனால் அந்தப் பள்ளியில் முகாம் நடைபெறுவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. இது குறித்து பள்ளி நிர்வாகிகளை கேட்ட போது, அங்கு நடைபெற இருந்த குறைதீர் முகாம் சேலையூரில் உள்ள நகராட்சி பள்ளிக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால் குறைதீர் முகாம் மாற்றப்பட்டதற்கான அறி விப்பு பலகையோ, சுவரொட்டியோ பள்ளியில் வைக்கப்படவில்லை. இத னால் குறைதீர் முகாமுக்கு வந்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையடுத்து குறைதீர் முகாம் நடைபெறும் சேலையூர் நகராட்சி பள்ளிக்கு மக்கள் சென்றனர். அங்கு சைக்கிள்கள் நிறுத்தும் இடத்தில் முகாம் நடைபெற்றுக் கொண் டிருந்தது. குடிநீர், கழிப்பறை உள் ளிட்ட எந்த வசதியும் செய்யப்பட வில்லை. முதியவர்கள், குழந்தை களுடன் வந்த பெண்கள் வெயிலில் வரிசையில் காத்திருந்தனர். இந் நிலையில் திடீரென்று குறைகளை நிரப்பும் விண்ணப்பம் தீர்ந்துவிட்ட தாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள், அங் கிருந்த அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் குறைதீர் முகாமில் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர் முகாமுக்கு வந்த பொதுமக்கள் இதுபற்றி கூறும்போது, “முறையான அறிவிப்பு இல்லாமல் குறைதீர் முகாமை இடம் மாற்றம் செய்துவிட்டனர். புதிய இடத்தில் அடிப்படை வசதிகள் கூட செய்ய வில்லை. வெயிலில் காத்திருக்கி றோம். அமைச்சர்கள் வரும்போது வழிநெடுகிலும் பேனர்களை வைக் கிறார்கள். ஆனால் குறைதீர் முகாமை இடம் மாற்றம் செய்தது பற்றி அறி விப்பு செய்யவில்லை” என்றனர்.