நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் போலீஸாருக்கு சத்து பானங்களை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வழங்கினார்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணியில் காவல்துறை யினரும் முன்கள வீரர்களாக உள்ளனர். இதனால், அவர்களில் சிலருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து காவலர் களுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீர், மூலிகை குடிநீர், முகக்கவசம், சானிடைசர் வழங்கப்பட்டன. இதற்கிடையே, சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு 25 ஆயிரம் சத்துபானங்களை தனியார் நிறுவனம் ஒன்று வழங்கியது. இதை வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் போலீஸாருக்கு நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இணை ஆணையர் (தலைமையிடம்) எஸ்.மல்லிகா, துணை ஆணையர்கள் ஆர்.திருநாவுக்கரசு, எம்.சுதாகர், விமலா, கே.பெரோஸ்கான் அப்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.