மூணாறில் நிலச்சரிவில் சிக்கியவர்களை விரைவில் மீட்க வேண்டும் என்று கேரள முதல்வருக்கு முதல்வர் பழனிசாமி வேண்டு கோள் விடுத்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை தீவிரம்
தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து சில தினங்களாக மிக அதிக கனமழை பெய்து வருகிறது.
இதனால் தமிழகத்தின் நீலகிரி மாவட்டம், கேரளாவின் இடுக்கி மாவட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. கேரள மாநிலம் மூணாறில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
ட்விட்டரில் பதிவு
இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் கடந்த 7-ம் தேதி அதிகாலை தேயிலை தோட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிஉயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை விரைந்து மீட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என கேரள முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.