740 டன் அமோனியம் நைட்ரேட்டை உடனடியாக அகற்ற மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மணலி வேதிக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ள அமோனியம் நைட்ரேட் கண்டெய்னர்கள் உள்ள பகுதியைச் சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளதால் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்திட வேண்டுமென அப்பகுதியில் ஆய்வு நடத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
பெய்ரூட்டில் நடந்த பெரு வெடிப்பில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் இருந்ததாகத் தகவல் வெளியானது. அந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இதையடுத்து சென்னையிலும் 740 டன் அமோனியம் நைட்ரேட் சுங்கத்துறை கட்டுப்பாட்டில் மணலி வேதிக்கிடங்கில் உள்ளதாகத் தகவல் வெளியானது.
இதுகுறித்து சுங்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், 740 டன் அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது. விரைவில் ஏலம் விடப்படும் எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியச் சுற்றுச்சூழல் இணை தலைமைப் பொறியாளர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அம்பத்தூர், விஞ்ஞான துணைத் தலைமை அலுவலர், தீயணைப்புத்துறை டிஜிபி, தீயணைப்புத்துறை இணை இயக்குநர் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர்..
ஆய்வின் முடிவில் அப்பகுதியில் உள்ள வேதிக்கிடங்கை நரசிம்மன் என்பவர் அக்டோபர் 2001 முதல் அமைத்துள்ளார். அங்கு 37 கண்டெய்னர்களில், ஒரு கண்டெய்னர் 20 டன் என 740 டன் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ளது. அனைத்தும் கிரிஸ்டல் துகள்களாக 25 கிலோ மூட்டைகளாக உள்ளன.
இந்தக் கிடங்கு பொன்னேரி நெடுஞ்சாலையை ஒட்டி, மக்கள் அதிகம் உள்ள இடம் 700 மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு பொதுமக்கள் சுமார் 7,000 பேர் வசிக்கின்றனர். பக்கத்தில் சடையன் குப்பம் கிராமம் 1,500 மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு 5,000 பேர் வசிக்கிறார்கள்.
விசாரணையில் 740 டன் அமோனியம் நைட்ரேட் கரூர் அம்மன் கெமிக்கல்ஸுக்குச் சொந்தமானது என்றும், சட்டப் பிரச்சினை காரணமாக அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது. அப்புறப்படுத்தும் பணி 3 நாளில் முடிந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுற்றுச்சுழல் சட்டம் 1989-ன் கீழ் உடனடியாக740 டன் அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அபாயகரமான பொருளாக உள்ளதால் உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை கிடங்கு உரிமையாளரே அந்த இடத்துக்கான பாதுகாப்புக்குப் பொறுப்பு என உத்தரவிடப்பட்டுள்ளது.