கரோனா பொது முடக்கத்தால் எத்தனையோ தொழில்கள் சீரழிந்துவிட்டன. பல தொழில்கள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. இதில் தெருவோர வியாபாரிகளின் நிலை மிக மிக மோசம். இந்தச் சூழலில் தெருவோர வியாபாரிகள் தங்கள் உரிமைகளை மீட்டெடுத்துக் கொண்டால், ஓரளவேனும் மீண்டு வந்துவிடலாம் என்று நம்பிக்கையை அளிக்கிறார் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் செவ்விளம்பரிதி.
சமூக ஆர்வலரான செவ்விளம்பரிதி, எளிய மக்களுக்கான போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். 2011-ல் ஜெயலலிதா கோடநாடு சென்ற சமயத்தில், அவர் செல்லும் வழியான மேட்டுப்பாளையத்தில் தெருவோர, சாலையோரக் கடைகளை அப்புறப்படுத்தினர் போலீஸார். இதனால் 3 மாத காலமாக அங்கு கடை போட முடியாமல் வியாபாரிகள் தவித்து நின்றனர். அப்போது வழக்கறிஞர் எனும் முறையில் அந்தப் பிரச்சினையில் தலையிட்ட இவர், கடைகள் அகற்றப்பட்டது மனித உரிமை மீறல் என்று சொல்லி போலீஸாருக்கு நோட்டீஸ் கொடுத்தார். அதன் பிறகு போலீஸ் அதிகாரிகள், கடைகள் வைக்க அனுமதித்தனர்.
இதையடுத்து தெருவோர வியாபாரிகளின் நலனைக் காக்கும் எண்ணம் கொண்டவர்களுடன் சேர்ந்து அமைப்பாக இயங்க ஆரம்பித்தார் செவ்விளம்பரிதி. அதுதான் பின்னாளில், தமிழ்நாடு திருவிழா மற்றும் சாலையோர வியாபாரிகள் சம்மேளனமாக வளர்ந்து, பின்னர் தேசிய தெருவோர வணிகர்கள் சம்மேளனத்துடன் (NATIONAL HAWKERS FEDERATION) இணைக்கப்பட்டது.
இந்த அமைப்புகள் ஒன்றிணைந்து தேசிய அளவில் சாலையோர, தெருவோர, திருவிழாக்கால வியாபாரிகளின் உரிமைக்காகப் போராடி வருகின்றன. கரோனா காலத்தில் கஷ்டஜீவனத்தில் இருக்கும் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர்கள் இவர்கள்தான். அதன் எதிரொலியாகத் தெருவோர வியாபாரிகளுக்காக ரூ. 10 ஆயிரம் வங்கிக் கடன் தொகை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது. அந்தக் கடனுதவியைப் பெற்றுக்கொள்வது தொடர்பாகத் தெருவோர வியாபாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் செவ்விளம்பரிதி, அது தொடர்பான பல்வேறு விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
''தெருவோர வியாபாரிகளுக்காக சட்டப் போராட்டங்கள் நடத்தி பல்வேறு உரிமைகளைச் சட்டபூர்வமாகப் பெற்றிருக்கிறோம். அதில் ஒன்றுதான், டி.வி.சி எனப்படும் நகர விற்பனைக் கமிட்டியை (Town Vending Committee) அமைத்துக்கொள்ளும் உரிமை. உள்ளாட்சி அமைப்புகள் அதற்கான அனுமதியை வழங்க வேண்டும். போலீஸ் அடக்குமுறையின் மூலம் தெருவோர வியாபாரிகளை அகற்றக்கூடாது. உள்ளாட்சி அமைப்புகளே அவர்களின் இருப்பை முடிவு செய்ய வேண்டும் என நிறைய விஷயங்கள் அதில் உள்ளன.
ஒவ்வொரு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சியிலும் தெருவோர, சாலையோர சிறு வியாபாரிகளைக் கணக்கெடுத்து டி.வி.சி. கமிட்டி அமைக்க வேண்டியதும், அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டியதும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஆணையர் மற்றும் செயல் அலுவலர்களின் பணியாகும். எனினும், இன்னமும் அது முறையாகப் பின்பற்றப்படவில்லை. குறிப்பாக, மேட்டுப்பாளையத்தில் 30 பேரைக் கொண்டு உருவாக்கப்பட்ட கமிட்டி பெயரளவுக்கே இருந்துள்ளது தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து முக்கியமானவர்கள் ஒருங்கிணைந்து கூட்டம் போட்டு, சுமார் 500 விண்ணப்பங்கள் வாங்கி நகராட்சியில் டி.வி.சி. உறுப்பினர்களாக்கக் கோரியுள்ளோம். டி.வி.சி அமைப்புதான் தெரு வியாபாரிகளுக்கு உறுதுணை. இதில் அங்கம் வகித்தால்தான் மத்திய அரசின் நிவாரணத் தொகை, கடன் தொகை போன்ற சலுகைகளைப் பெற முடியும் என்பதைச் சாலையோர, தெருவோர வியாபாரிகள் மத்தியில் பிரச்சாரமாகவே செய்து வருகிறோம்.
30 ஆண்டு காலப் போராட்டம் மற்றும் 10 ஆண்டு காலச் சட்டப் போராட்டத்தின் விளைவாக, 2014-ல் தெரு வியாபாரிகள் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. ஆனால், தமிழகத்தின் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் அந்தச் சட்ட விதிகளை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளாமலும், மத்திய அரசின் தெரு வியாபாரிகள் தேசியக் கொள்கையை (2009) அமல்படுத்தாமலும் இயங்கி வருகின்றன. இந்த நிலையை மாற்றுவதற்கான பொறுப்பு அனைத்துத் தரப்பினருக்கும் இருக்கிறது.
இன்றைக்கு நாடு முழுவதும் சுமார் 5.5 கோடி தெரு வியாபாரிகள் உள்ளனர். இவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இவர்களுக்கு உதவ அரசு கொண்டுவந்திருக்கும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் காலத்தின் கட்டாயம். அதைத்தான் நாங்கள் செய்துவருகிறோம்'' என்றார் செவ்விளம்பரிதி.