தமிழக அரசின் இருமொழிக் கொள்கை தொடர்பாக தலைமைச் செயலர் அல்லது பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு உதவி பெறும், உதவி பெறாத தனியார் பள்ளி உபரி ஆசிரியர்களை காலியிடங்களுக்கு இடமாற்றம் செய்வது தொடர்பான வழக்குகளை நீதிபதிகள் சத்தியநாராயணன், சுரேஷ்குமார் அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அரசு உதவி பெறும், உதவி பெறாத, சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளின் கல்வி மற்றும் நிர்வாக விஷயங்கள் மட்டும் இல்லாமல் பணியாளர்கள் பிரச்சினையை சரி செய்ய தமிழகத்தில் ஒருங்கிணைந்த சட்டம் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம் 1973 மற்றும் விதிகள் தவிர வேறு எந்த ஒருங்கிணைந்த சட்டமும் இல்லை. அனைத்து பிரச்சினைகளுக்கும் அவ்வப்போது அரசு உத்தரவுகள், நிர்வாக உத்தரவுகள் மட்டுமே பிறப்பிக்கப்படுகின்றன. சில நேரங்களில் பிரச்சினைக்கு ஏற்பவும், தேவைக்கு ஏற்பவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.
இதை தவிர்க்க தனியார் பள்ளிகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் குறிப்பிட்ட கால கொடுவுக்குள் ஒருங்கிணைந்த சட்டம் நிறைவேற்ற அரசு கொள்ளை முடிவு எடுத்துள்ளதா என்பதை நீதிமன்றம் தெரிந்து கொள்ள விரும்புகிறது.
இந்த வழக்கு விசாரணையின் போது, மற்றொரு முக்கியமான விஷயம் தெரியவந்தது. மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையை தொடர்ந்து தமிழக முதல்வர் தமிழகம் இருமொழிக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து கடைபிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இருமொழிக் கொள்கை மாநில அரசின் கொள்கையாக எடுத்துக்கொண்டால், அந்த இரு மொழி தமிழும் வேறு எதாவது ஒரு மொழியா? அல்லது தமிழும் ஆங்கிலம் மட்டும் தானா?
தமிழும் ஆங்கிலமும் மட்டும் என்றால் தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கிலத்தை கற்பிக்கும் மொழியாக மாறிய பள்ளிகள் அல்லது தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழியையும் சரிசமமாக கற்பிக்கும் மொழியாக கொண்ட பள்ளிகள் அல்லது வேறு மொழி விகிதாச்சாரத்தில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு அரசு மானியம் கொடுப்பதில் மாற்றுக்கருத்து ஏற்படுமா? என்பது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் அல்லது பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இதற்கு பதிலளிக்க அரசு 2 வார அவகாசம் கேட்டுள்ளது. 2 வார அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும் அவகாசம் கேட்காமல் நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். விசாரணை ஆக. 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.