மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் திமுக சார்பில் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட கரோனா முன்கள போராளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறுப்பாளர் பெ.கீதாஜீவன் எம்எல்ஏ தலைமை வகித்து, கருணாநிதி திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து கரோனா முன்களப் போராளிகளான தூய்மைப் பணியாளர்களை சால்வை அணிவித்து பாராட்டியதோடு, 100 பேருக்கு கையுறை, முகக்கவசம், சோப் போன்ற கரோனா தடுப்புப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் மற்றும் நிதியுதவி ஆகியவற்றை கீதாஜீவன் எம்எல்ஏ வழங்கினார்.
தொடர்ந்து தூத்துக்குடி நகரில் உள்ள பல்வேறு ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் முதியோருக்கு மதிய உணவுகள் வழங்கப்பட்டது. மேலும் தூத்துக்குடி மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் அந்தந்த பகுதி நிர்வாகிகள் சார்பில் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கீதாஜீவன் வழங்கினார்.
பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன், முன்னாள் மேயர் இரா.கஸ்தூரி தங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தெற்கு மாவட்டம்:
இதேபோல் திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருணாநிதியின் திருவுருவ படத்துக்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து திருச்செந்தூர், காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலாபுரம், ஆறுமுகநேரி, காயாமொழி, தேரிக்குடியிருப்பு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் முதல் இடம் பிடித்த மாணவ, மாணவியர் 13 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் மற்றும் பதக்கம், 2-ம் இடம் பிடித்த 14 மாணவ, மாணவியருக்கு தலா ரூ.3 ஆயிரம் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினார்.
மேலும், பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர பொறுப்பாளர் வாள்சுடலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று திமுகவினர் கருணாநிதி திருவுருவ படத்துக்கு அஞ்சலி செலுத்தி, துய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.