காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 1.35 அடியாக உயர்ந்துள்ளது.
தமிழக-கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்துத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று (ஆக.6) மாலை 6,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஆக.7) காலை 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
நேற்று அணையின் நீர்மட்டம் 64.20 அடியாக இருந்தது. இன்று காலை 65.55 அடியாக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.35 அடி உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 3,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் நீர் இருப்பு 28.99 டிஎம்சியாக உள்ளது. தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நிலையில், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.