சாத்தான்குளத்தில் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மகேந்திரன் இறந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் இதுவரை வழக்கு பதிவு செய்யாதது ஏன்? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் வடிவு. இவர் தன் மகன் மகேந்திரனை சாத்தான்குளம் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மகேந்திரன் உயிரிழந்ததாகவும், இதனால் மகேந்திரன் இறப்பு தொடர்பாக விசாரிக்கவும், சாத்தான்குளம் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மகேந்திரன் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி தரப்பில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது இரு மருத்துவர்களை விசாரிக்க வேண்டியதுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் மகேந்திரன் மரணம் தொடர்பாக தற்போது வரை ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை. சிபிசிஐடியின் பதில் திருப்தியளிக்கவில்லை என நீதிபதி தெரிவித்தார்.
மகேந்திரன் மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில், முழு விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு அடுத்த விசாரணையை செப். 8-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.