திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று. தன்னுடன் நெருக்கமாகப் பழகிய ஒவ்வொருவருக்கும் அவர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் ஒன்றைக் கட்டாயம் விட்டுச் சென்றிருப்பார் கருணாநிதி. அவர் மறைந்தாலும் அவருடனான அந்த மறக்க முடியாத தருணத்தை இன்னமும் பலரால் மறக்கமுடியவில்லை.
நாவன்மையால் கருணாநிதியின் இதயத்தில் இடம்பிடித்த நாஞ்சில் சம்பத்துக்கும் அப்படியோர் அனுபவம் உண்டு. கருணாநிதியுடனான அந்த நீங்காத நினைவை 'இந்து தமிழ்' இணையதளத்திடம் பகிர்ந்து கொண்டார் சம்பத்.
''1989-ம் ஆண்டு பொதுத் தேர்தல் மேடைகளில் தொடர்ச்சியாக ஒன்பதரை மணி நேரம் பேசியதால் கலைஞரின் அன்புக்குரிய தம்பிகளில் ஒருவனானவன் இந்த சம்பத். அந்தத் தகுதியின் அடிப்படையில், 'எனது திருமணத்தை நீங்கள்தான் தலைமையேற்று நடத்தி வைக்க வேண்டும்' என்று கலைஞரைச் சந்தித்து உரிமையோடு கேட்டேன். அப்போதெல்லாம் என்னைப் போன்ற சொற்பொழிவாளர்கள் திமுக தலைமையை நேரடியாக அணுகிவிட முடியாது. யாராக இருந்தாலும் மாவட்டச் செயலாளர்கள் மூலமாகத்தான் தலைமையைத் தொடர்புகொள்ள முடியும் என்பது திமுகவில் கடைப்பிடிக்கப்படும் ஒழுங்கு.
ஆனால், நான் யாரையும் கேட்கவில்லை. நேராகக் கலைஞரைச் சந்தித்து எனது விருப்பத்தைச் சொன்னேன். என்னிடம், 'மாவட்டச் செயலாளரின் கடிதத்தைக் கொண்டுவா' என்றெல்லாம் கேட்கவில்லை தலைவர். மாறாக, அண்ணன் சண்முகநாதனை அழைத்து டைரியைப் புரட்டிவிட்டு, 'ஆகஸ்ட் 15-ம் தேதி நான் கோட்டையில் கொடியேற்ற வேண்டும். அதை முடித்துவிட்டு 16-ம் தேதி புறப்பட்டு வருகிறேன். 17-ம் தேதி திருமணத்தை வைத்துக் கொள்ளலாமா?'’ என்று கேட்டார். நானும் தட்டாமல் சரி என்றேன்.
ஆகஸ்ட் 17-ம் தேதி ஆவணி முதல் தேதி வியாழக்கிழமை என நினைக்கிறேன். காலை 11 - 12 மணிக்கு திருமணத்தை நடத்த நேரம் குறித்திருந்தோம். சென்னையிலிருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கலைஞருடன் அண்ணன் துரைமுருகன், வீரபாண்டியார், கண்ணப்பன் உள்ளிட்டவர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். எதிர்பாராத விதமாக ரயில் தாமதமாக வந்து கொண்டிருக்கிறது. அப்போது ‘நாம் திருநெல்வேலி போய்ச் சேர்வதற்குள்ளாகவே அந்தத் தம்பிக்குத் திருமணம் நடந்து முடிந்துவிடும் போலிருக்கிறது. அதனால் நெல்லை வரை காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கு முன்பாக கோவில்பட்டியிலேயே ரயிலை விட்டு இறங்கி காரில் நாகர்கோவிலுக்குப் புறப்படுவோம்’ என்று பயணத் திட்டத்தை மாற்றுகிறார் கலைஞர்.
ஒரு முதல்வரின் பயணத் திட்டத்தை அப்படியெல்லாம் நினைத்த மாத்திரத்தில் மாற்றி அமைப்பது மிகவும் சிரமமான காரியம். இருந்தாலும் ஒரு தொண்டனின் திருமணத்தைக் குறித்த நேரத்தில் சென்று நடத்தி வைக்க வேண்டும் என்ற துடிப்பில் கலைஞர் அதைச் செய்தார். அதுபோலவே சரியான நேரத்துக்கு நாகர்கோவிலுக்கு வந்து எனது திருமணத்தை நடத்தி வாழ்த்தினார்.
பொதுவாக, திமுக தலைவர் ஒரு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டுமானால் தலைமைக் கழகத்தில் அதற்கு ஒரு கட்டணத்தைச் செலுத்த வேண்டும். என்னிடத்திலே அதைக்கூடக் கேட்காத கலைஞர், எங்களை வாழ்த்திவிட்டு, ‘மனைவியை அழைத்துக் கொண்டு எப்போது சென்னை வருகிறாய்?’ என்று கேட்டார்.
அன்றைய தினமே நாகர்கோவில் எஸ்எல்பி மஹாலில் அரசு விழா ஒன்றும் நடந்தது. அதில் கலந்துகொண்ட கலைஞர், ‘அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக நான் நாகர்கோவிலுக்கு வரவில்லை. தம்பி நாஞ்சில் சம்பத்தின் திருமணத்தை நடத்தி வைப்பதற்காகவே நான் வந்தேன்’ என்று அரசு விழாவில் பதிவு செய்தார். அடுத்த நாள் முரசொலியில் என்னுடைய திருமணச் செய்தி தலைப்புச் செய்தியாக வந்தது. அப்படியொரு கவுரவத்தை எனக்குத் தந்தார்.
கலைஞரோடு நான் தொடர்ந்து பயணித்திருக்க வேண்டும். அப்படிப் பயணித்திருந்தால் அவரிடம் நான் கற்றதும் பெற்றதும் இன்னும் நிறையவே இருந்திருக்கும். ஆனால், என்னால் பயணிக்க முடியவில்லை. கால் நூற்றாண்டு காலத்தைத் தொலைத்துவிட்ட வருத்தம் எனக்கு இப்போதும் இருக்கிறது. அது என்னுடைய தவறுதான்.
பொதுவாக நான் பதவிகளை விரும்பாதவன். ஆனால், கால் நூற்றாண்டு காலம் கலைஞரோடு இருந்திருந்தால், இந்நேரம் தலைமைக் கழகத்தில் கவுரவமான ஒரு இடத்தில் இருந்திருப்பேன். பெரிதாக ஏதும் இல்லாது போனாலும், கார், பங்களா வசதிகளுடன் வாழ்ந்திருப்பேன். என்னுடைய தேவைகளுக்காக இன்னொருவரிடம் போய் இரவல் கேட்கும் நிலைக்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டிருக்காது. இப்போது கடவுளிடம் நான் வைக்கும் பிரார்த்தனையே என்னை யார் வீட்டு வாசல் முன்பும் கொண்டுபோய் விட்டுவிடாதே என்பதுதான்.''
கருணாநிதி தனக்காக விட்டுச் சென்ற மறக்க முடியாத தருணத்தை இப்படி உருக்கமாகச் சொல்லி முடித்தார் நாஞ்சில் சம்பத்.