கரோனா தொற்றால் உயிரிழக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை ரூ.25 லட்சமாகக் குறைக்கக் கூடாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கரோனா தொற்றால் உயிரிழக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆரம்பத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து, அத்தொகையை ரூ.1 கோடியாக உயர்த்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இதையடுத்து, 50 லட்சம் ரூபாய் மத்திய அரசு அறிவித்திருப்பதை மேற்கோள் காட்டி, இழப்பீட்டுத் தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தி ஏப்.22 அன்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில், அந்தத் தொகை தற்போது ரூ.25 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கரோனா தொற்றால் உயிரிழந்த 28 அரசுப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு ஆகஸ்ட் 5-ம் தேதி அறிவித்தது.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஆக.7) தன் ட்விட்டர் பக்கத்தில், "கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இப்போது அது ரூ.25 லட்சமாகக் குறைக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. அறிவித்த தொகையை வழங்க வேண்டும்!
கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் ரூ.1 கோடிக்கு ஆயுள் காப்பீடு பெற வேண்டும். இதன்மூலம் பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்கள் குடும்பங்களுக்குக் கூடுதல் நிதி கிடைக்கும்; அரசுக்கும் அதிக செலவு ஏற்படாது" எனப் பதிவிட்டுள்ளார்.