காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா. 
தமிழகம்

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மாவுக்குக் கரோனா தொற்று

வீ.தமிழன்பன்

காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மேல்தளத்தில் ஆட்சியர் அர்ஜூன் சர்மா வசித்து வருகிறார். அவரது வீட்டுப் பணியாளருக்கு நேற்று (ஆக.6) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, நலவழித்துறையினர், ஆட்சியர் மற்றும் அவரது வீட்டில் உள்ளோர் 5 பேரிடம் கரோனா பரிசோதனைக்கான சளி மாதிரிகளைச் சேகரித்தனர். தொடர்ந்து, ஆட்சியர், அவரது குடும்பத்தார் மற்றும் நெருங்கிய தொடர்பில் இருந்தோர் உள்ளிட்ட 13 பேர் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டனர்.

இந்நிலையில், இன்று (ஆக.7) வந்த சோதனை முடிவுகளில் ஆட்சியருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. குடும்பத்தில் உள்ள மற்ற 4 பேருக்குத் தொற்று இல்லை.

இதுகுறித்து மாவட்ட நலவழித்துறை துணை இயக்குநர் கே.மோகன்ராஜ், 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறுகையில், "ஆட்சியர் உடல் நிலையில் எவ்வித அறிகுறியும் இல்லாததால் ஆட்சியர் தொடர்ந்து வீட்டுத் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளித்துத் தூய்மைப்படுத்தப்படவுள்ளது. ஆட்சியருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தோர் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுப் பரிசோதனை செய்யப்படவுள்ளது.

மேலும் ஆட்சியருடன் தொடர்பிலிருந்த பொதுமக்கள், வெளியிடங்களில் உள்ள யாரும் தங்களுக்கு உடலில் ஏதேனும் அறிகுறிகள், சந்தேகம் இருந்தால் உடனடியாக நலவழித்துறையைத் தொடர்புகொள்ள வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

SCROLL FOR NEXT