துரைமுருகன்: கோப்புப்படம் 
தமிழகம்

பதவிகள் கிடைக்கும் என்பதற்காக நான் இயக்கத்துக்கு வரவில்லை; ஒரு லட்சியவாதியின் வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை: துரைமுருகன் காட்டம்

செய்திப்பிரிவு

எம்எல்ஏ - எம்.பி. - அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று நான் திமுக இயக்கத்திற்கு வந்தவன் அல்ல . அண்ணாவின் 'திராவிடு நாடு' கொள்கையைப் பார்த்து ஒரு போராளியாக 1953 ஆம் ஆண்டு இந்த இயக்கத்திற்கு வந்தவன் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவால், அப்பொறுப்பு காலியாக உள்ளது. இதனால், புதிய பொதுச் செயலாளரைத் தேர்வு செய்வதற்கான திமுக பொதுக்குழு மார்ச் 29-ம் தேதி கூடும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பொதுச் செயலாளர் பொறுப்புக்குப் போட்டியிட உள்ளதால், பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரைமுருகன் தன்னிடம் கடிதம் அளித்ததாகவும், அதனால், மார்ச் 29-ம் தேதி பொருளாளர் பதவிக்கும் தேர்வு நடைபெறும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

கரோனா ஊரங்கு காரணமாக திட்டமிட்டபடி திமுக பொதுக்குழு கூடவில்லை. பொதுச் செயலாளர் தேர்வும் நடைபெறவில்லை. திமுக பொருளாளராக துரைமுருகன் தொடர்கிறார்.

இந்நிலையில் தமிழ் நாளிதழ் ஒன்றில், திமுக பொதுச் செயலாளர் பதவி கொடுக்காத ஏக்கத்தில் துரைமுருகன் இருப்பதாகச் செய்தி வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்து காட்டமான அறிக்கை ஒன்றை துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக, துரைமுருகன் இன்று (ஆக.7) வெளியிட்ட அறிக்கை:

"ஏதோ எனக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கவில்லை என்ற ஏக்கத்தில் திமுகவுக்குள் கலக்கத்தை உருவாக்க நான் முனைவதுபோல், ஒரு செய்தியை அதிலும், தலைப்புச் செய்தியாக தமிழ் நாளிதழ் ஒன்று இன்று காலை வெளிவந்த இதழில் வெளியிட்டு இருக்கிறது.

என்மீது ஒரு களங்கத்தைக் கற்பிக்கின்ற வகையில் செய்தி வந்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

என் வரலாறு அந்த செய்தித்தாளுக்குத் தெரியாது போலும். எம்எல்ஏ - எம்.பி. - அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று இந்த இயக்கத்திற்கு வந்தவன் அல்ல துரைமுருகன். அண்ணாவின் 'திராவிடு நாடு' கொள்கையைப் பார்த்து ஒரு போராளியாக 1953 ஆம் ஆண்டு இந்த இயக்கத்திற்கு வந்தவன். நான் இதுவரை பெற்ற பதவிகள் எனக்குக் கிடைக்காமல் போய் இருந்தாலும், கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருந்து, இருவண்ணக் கொடியைப் பிடித்துக் கொண்டு திமுகவுக்காக கோஷமிட்டு இருப்பேன். ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவன் நான் என்பது அந்த செய்தித்தாளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

அந்த செய்தித்தாளுக்கு ஒரு லட்சியவாதியின் வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை. சுமார் 60 ஆண்டுகளாக என்னை நன்கு அறிந்தவர்கள் திமுக தொண்டர்கள். இந்தப் பிரச்சாரம் அவர்களிடம் எடுபடாது".

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT