நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் பிரதான அருவியில் ஆர்ப்பரித்தபடி கொட்டும் தண்ணீர். 
தமிழகம்

ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக உயர்வு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 26 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கேரள, கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் விரைவாக நிரம்பின. அவ்வணைகள் முழு கொள்ளளவை எட்டும் முன்பாக, அணைகளுக்கு வரும் நீரின் அளவுக்கு ஏற்ப அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் முழுக்க தமிழகத்தை நோக்கி காவிரியாற்றில் திறந்து விடப்படுகிறது. முன்னதாக, குறைந்த அளவில் திறக்கப்பட்டு வந்த தண்ணீர், 3 நாட்களுக்கு முன்னர் இரு அணைகளில் இருந்தும் விநாடிக்கு சுமார் 35 ஆயிரம் கன அடி அளவுக்கு திறக்கப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலுவில் நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 4500 கன அடி நீர்வரத்து பதிவானது. இது, முற்பகல் 12 மணியளவில் 10 ஆயிரம் கன அடியாகவும், பகல் 2 மணியளவில் 22 ஆயிரம் கன அடியாகவும் உயர்ந்தது. மேலும், மாலை அளவீட்டின்படி விநாடிக்கு 26 ஆயிரம் கன அடி அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து சீராக உயர்ந்து வருகிறது.

மூழ்கிய பாறைகள்

ஒகேனக்கல் பகுதியில் காவிரியாற்றில் கடந்த கோடை காலத்தின்போது நீர்வரத்து விநாடிக்கு 500 கன அடிக்கும் கீழாக சரிந்தது. அதன் பின்னர் அவ்வப்போது பெய்த மழைக்கு ஏற்ப சற்றே ஏற்ற, இறக்கங்களுடன் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. இருப்பினும், காவிரியாற்றில் பாறைகளாக காட்சியளித்தன. ஆனால், தற்போது 26 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் பாறைகள் மூழ்கியுள்ளன. இருகரை தொட்டு தண்ணீர் ஓடத் தொடங்கியுள்ளது.

அருவிகளில் சீற்றம்

நீர்வரத்து உயர்வு காரணமாக பிரதான அருவி, ஐவர் பாணி அருவி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் சீற்றத்துடன் பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறது.

தொடர் கண்காணிப்பு

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தருமபுரி மாவட்ட காவிரிக் கரையோரப் பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுப்பணித்துறை, வருவாய், வனம், காவல், தீயணைப்பு உள்ளிட்ட அரசுத் துறையினர் காவிரி ஆற்றோரப் பகுதிகளில் தொடர் கண்காணிப்பையும் மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT