தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், சிறுவாணி நீர்ப் பிடிப்புப் பகுதியில் நீர்வரத்து அதிகரித்து, நொய்யல் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. தொண்டாமுத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் பல்வேறு பயிர்களை பயிரிட்டுள்ள நிலையில், தொடர் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த, ஆயிரம் ஏக்கர் பரப்பிலான வெங்காயம் தண்ணீரில் மூழ்கியது. இதேபோல, பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிட்டிருந்த வாழை மரங்களும் பலத்த காற்றின் காரணமாக சாய்ந்தன. குலைதள்ளிய வாழை மரங்கள் வேரோடு சாய்ந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
இதுகுறித்து தொண்டாமுத்தூர் பகுதி விவசாயிகள் கூறும்போது, "முண்டந்துறை பகுதியில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. சிலர் டிராக்டர், டெம்போ ஆகியவற்றை அடமானம் வைத்து நிலத்தை குத்தகைக்கு எடுத்து, சாகுபடி செய்திருந்தனர். அடுத்த மாதம் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழைகள் தற்போது சேதமடைந்துள்ளதால், லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதேபோல, சின்ன வெங்காயம், பாக்கு, மக்காசோளம் பயிரிட்டிருந்த விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றனர்.
மழையால் சேதமடைந்த பயிர்கள் குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். "சேத மதிப்பு குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பித்த பின்னர், அரசு உரிய நிவாரணம் வழங்கும்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.