கோவை அருகே மரத்தில் கார் மோதி விபத்து ஏற்பட்டதில் 4 இளைஞர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
கோவை தடாகம் காவல் எல்லைக்குட்பட்ட ஆனைக்கட்டி - கோவை சாலையில் இன்று (ஆக.7) அதிகாலை வேகமாக வந்த கார், சாலையோரம் இருந்த மரத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
அவ்வழியாக சென்ற மக்கள் இது தொடர்பாக தடாகம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் 4 இளைஞர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
உயிரிழந்தவர்கள்
கோவை சீரநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த இந்தரேஷ் (22), பூமார்க்கெட்டைச் சேர்ந்த கார்த்திக் (22), வடகோவையைச் சேர்ந்த மணிகண்டன் (22) , வடவள்ளியைச் சேர்ந்த மோகன்ஹரி (23) ஆகியோர் எனவும், காயமடைந்தவர் வடகோவையைச் சேர்ந்த பிரஜீஸ் (23) எனவும் காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது.
இதில், இந்தரேஷ் தனியார் கல்லூரி மாணவர், கார்த்தி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும், மோகன்ஹரி தனியார் நிறுவன ஊழியர் என்பதும் தெரிய வந்தது. காயமடைந்த பிரஜீஸ் தனியார் கல்லூரி மாணவர் என்பதும் தெரிய வந்தது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. காயமடைந்த பிரஜீஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காவல்துறையினர் விசாரணையில் மேற்கண்ட 5 பேரும் நண்பர்கள் என்பதும், கவுண்டம்பாளையத்தில் நடந்த நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்று விட்டு காரில் வீடு திரும்பும் போது மரத்தில் மோதி உயிரிழந்ததும் தெரிய வந்தது.
மேலும், இவர்கள் மது போதையில் இருந்திருக்கலாம் எனவும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். காரை இந்தரேஷ் ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.