தமிழக மக்கள் அனைவரும் தூய பட்டு, பருத்தி, கைத்தறி ரகங்களை வாங்கி அணிந்து, நெசவாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
உள்நாட்டு பொருட்களின் உற்பத்திக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் சுதேசி இயக்கம் கடந்த 1905 ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கப்பட்டது. அதை நினைவுகூரும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களை கவுரவிக்கும் விதமாகவும் கடந்த 2015 முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7-ம் தேதி தேசிய கைத்தறி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
ஜவுளி தொழிலின் பல்வேறு உட்பிரிவுகளான நூற்பு பிரிவு, கைத்தறி நெசவு, விசைத்தறி நெசவு, பதனிடுதல், பின்னலாடை, ஆயத்த ஆடை என அனைத்து பிரிவுகளிலும் நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்தில் மொத்தம் 1,133 தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் 2.46 லட்சம் கைத்தறிகளுடன் இயங்கி வருகின்றன. இந்த சங்கங்களில் பல்வேறு வகைப்பட்ட கைத்தறி துணிகள் ஆண்டுக்கு சராசரியாக ரூ.1,050 கோடிக்கு விற்கப்படுகின்றன.
நெசவாளர் நலனுக்காக சேமிப்பு, பாதுகாப்பு திட்டம், முதியோர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், நெசவாளர் நல்வாழ்வு காப்பீடு, இலவச மின்சாரம், நெசவாளர் முத்ரா திட்டம் ஆகிய திட்டங்களை தமிழக அரசு, செயல்படுத்தி வருகிறது. நெசவாளர்களின் வாரிசுகளுக்கு உதவித் தொகைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கில், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் 4 இணை இலவச சீருடை வழங்கும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன. கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடி மானியம் ரூ.150 கோடியாக உயர்த்தப்பட்டது.
கைத்தறி தொழிலை நிலை நிறுத்தவும், கைத்தறி நெசவாளர்களை பாதுகாக்கவும் கைத்தறி ஆதரவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கரோனா ஊரடங்கால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு தமிழ்
நாடு கைத்தறி, கைத்தறி பட்டு நெய்யும் தொழிலார்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 1 லட்சத்து 3 ஆயிரத்து 343 பேருக்கு 2 தவணைகளாக தலா ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. நலவாரியத்தில் பதிவு செய்யாமல், இலவசமாக 200 யூனிட் மின்சாரம் பெறும் 73,184 நெசவாளர்களுக்கும் ரூ.2,000 என மொத்தம் ரூ.14.64 கோடி வழங்கப்பட்டுள்ளது.
நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், தமிழக மக்கள் அனைவரும் தூயபட்டு, பருத்தி, கைத்தறி உற்பத்தி
ரகங்களை வாங்கி அணிந்து, நெசவாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். தமிழக கைத்தறி நெசவாளர்கள், இத்தொழில் சார்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் தேசிய கைத்தறி தின வாழ்த்துகள்.