காசிமேடு மீன் சந்தையில் ரூ.10 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய விற்பனை கடைகள், ஏலக் கூடம் அடுத்தமாதம் திறக்கப்படும் என்று மீன்வளத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகு, பைபர் படகு உள்ளிட்டவற்றின் மூலம்மீன்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டுவந்தனர். இவர்கள், பிடிக்கும் மீன்களை காசிமேடு மீன் விற்பனை சந்தையில் விற்பனை செய்து வந்தனர். காசிமேடு மீன்விற்பனை சந்தை சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
ரூ.10 கோடி செலவில்..
இதற்கு தீர்வு காணும் வகையில், ரூ.10 கோடி செலவில் காசிமேடு மீன் விற்பனை சந்தையை சீரமைக்கும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இப்பணி முடியும் தருவாயில் உள்ளது. எனவே, புதிய விற்பனை கடைகள், ஏலக்கூடம் உள்ளிட்டவை அடுத்தமாதம் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக, மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காசிமேட்டில் மீன்கள் ஏலம்விடும் கூடம், விற்பனை செய்வதற்கான கடைகள் உள்ளிட்டவை கட்டும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. பணிகள் முழுமையாக முடிந்து அடுத்த மாதம் கடைகள், ஏலக் கூடம் உள்ளிட்டவை திறக்கப்படும். அதன்பிறகு, மீன்களும் தூய்மையாக விற்பனை செய்யப்படும். மீனவர்களும் இடப்பற்றாக்குறை இன்றி வசதியாக மீன் வியாபாரம் செய்ய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.