தமிழகம்

கால்களைக் கட்டி கழிப்பறையில் தாக்குதல்; பெரியகுளம் போலீஸார் மீது டீக்கடைக்காரர் புகார்: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

கழிப்பறையில் கால்களை கட்டிப் போட்டு தாக்கியதாகப் பெரியகுளம் போலீஸார் மீது டீக்கடைக்காரர் தெரிவித்துள்ள புகார் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி பெரியகுளம் காந்திநகரைச் சேர்ந்த ராஜா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''நான் காந்திநகரில் டீக்கடை நடத்தி வருகிறேன். அதிமுகவைச் சேர்ந்த சந்தோசம் என்பவர் அளித்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீஸார் என்னை விசாரணைக்கு அழைத்தனர். நான் சென்றபோது புகார் அளித்த சந்தோசம் காவல் நிலையத்தில் இருந்தார். அவரும், காவல் ஆய்வாளர் சுரேஷூம் என்னை அடிக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டனர்.

என் கால்களைக் கட்டிப்போட்டு காவல் நிலையக் கழிப்பறையில் அடைத்தனர். அங்கு வைத்து சார்பு ஆய்வாளர் செல்வராஜ், போலீஸார் கருப்பையா, பால்பாண்டி, அனிஷ், ஈஸ்வரன் மற்றும் 3 போலீஸார் கடுமையாகத் தாக்கினர். இதில் எனது உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டன.

பின்னர் சந்தோசத்தின் புகாரின் பேரில் பொய் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். நீதித்துறை நடுவர் உத்தரவிட்டும் எனக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை. நான் நல்ல உடல் நிலையில் இருப்பதாக மருத்துவர் பாபு வெங்கடேசன் போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கினார். இதனால் என்னைச் சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்ததும் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன்.

என்னைத் தாக்கிய காவல் ஆய்வாளர் சுரேஷ், சார்பு ஆய்வாளர் செல்வராஜ் உள்ளிட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவும், போலியான மருத்துவத் தகுதிச் சான்று வழங்கிய மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கவும், எனக்கு இழப்பீடு மற்றும் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்''. இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கருணாநிதி வாதிட்டார். மனு தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆக. 18-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT