தமிழகம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர் யானை பெண் குட்டி ஈன்றது

செய்திப்பிரிவு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர் யானை ஒன்று பெண் குட்டியை ஈன்றது. இது தொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 16 வயதுடைய சவுந்தர்யா என்ற பெண் நீர் யானை, வாம்புரி என்ற ஆண் நீர் யானையுடன் இணைந்து கடந்த செப்டம்பர் 7-ம் தேதி பெண் குட்டியை ஈன்றது.

தெளிந்த நீரோட்டமுள்ள ஆறு போன்ற நீர்நிலைகளில் மட்டுமே நீர் யானைகள் இனப்பெருக்கம் செய்யும். அடைப்பிடங்களில் இனப் பெருக்கம் செய்வது அரிது. வண்ட லூர் பூங்காவில் இயற்கை யான அடைப்பிடம் அமைக்கப் பட்டிருப்பதால் இனப்பெருக்கம் சாத்தியமாகியுள்ளது. இந்த நீர் யானைகள் நீர் நிலைகளிலேயே சாணங்களை கழிக்கக்கூடியவை என்பதால் அடிக்கடி நீரின் தரம் கண்காணிக்கப்படுகிறது. மேலும் நீர் யானை அடைப்பிடங்களில் உள்ள நீர்நிலைகளில் திலேப்பியா போன்ற மீன்களும் வளர்க்கப்படுகின்றன. இவை நீர் யானைகள் கழிக்கும் சாணங்களை உண்டு, நீரை தூய்மையாக வைக்கின்றன. நீர் யானைக்கு உணவாக பழங்கள், தவிடு, கோ4, பாரகிராஸ் போன்ற புல் வகைகள் வழங்கப்படுகின்றன.

நீர் நில வாழ் உயிரினமான இவை, நிலவாழ் உயிரினங்களில் யானை, காண்டாமிருகத்துக்கு அடுத்த படியாக 3 வது பெரிய உயிரினமாகும். குதிக்கத் தெரியாத உயிரினமான இது, மணிக்கு நிலத்தில் 30 கி.மீ வேகத்தில் ஓடவும், நீரில் 8 கி.மீ வேகத்தில் நீந்தவும் செய்யும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT