தமிழகம்

லெபனான் வெடிவிபத்து எதிரொலி; சென்னையில் உள்ள  740 டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது: சுங்கத்துறை விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை சுங்கத்துறைக்கு சொந்தமான வேதி கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளதாக சுங்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.

2 நாட்களுக்கு முன் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வெடிமருந்து சேமிப்புக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் வெடித்து சிதறியது இந்த பெரும் வெடிவிபத்தில் 135 பேர் பலியானார்கள். பெரும் வெடிப்புக்கு காரணம் அங்குள்ள வெடிமருந்து சேமிப்புக்கிடங்கில் சேமித்து வைத்திருந்த அமோனியம் நைட்ரேட் எனும் வெடிபொருள் காரணமாக அமைந்தது.

இதேப்போன்ற 2015-ம் ஆண்டு சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் மூலமாக அமோனியம் நைட்ரேட் சட்டவிரோதமாக கொண்டுச் செல்லப்பட்டபோது சுமார் 740 டன் கைப்பற்றப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இதை அப்புறப்படுத்தி வேறு வகையில் உரமாக பயன்படுத்தவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.

சென்னைக்கு அச்சுறுத்தலாக சென்னை துறை முகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக 740 டன் அளவிலான அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் சுமார் 35 க்கும் அதிகமான கண்டெய்னர்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள செய்தி சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தங்களிடம் உள்ள அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளதாக சுங்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 2015 ம் ஆண்டு கரூர் அம்மன் கெமிக்கல்ஸ் நிறுவனம் உரிய ஆவணங்கள் இல்லாததால் இறக்குமதி செய்த சுமார் 750 டன் அளவிலான அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் வடசென்னையில் உள்ள துறைமுக கிடங்கில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனைத்தொடர்ந்து சென்னை சுங்கதுறை அலுவலகம் சேமித்து வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட் குறித்து விளக்கம் கொடுத்துள்ளது.

“சென்னையில் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 740 டன் அம்மோனியம் நைட்ரேட் மணலியில் உள்ள சுங்கத்துறை சொந்தமான வேதிகிடங்கில் பாதுகாப்பாக உள்ளது. மணலியில் உள்ள வேதிக்கிடங்கை சுற்றிலும் குடியிருப்புகள் இல்லை, அதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை.

கடந்த ஆறு வருடமாக சேமித்து வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட் நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்புடன் உள்ளது. மேலும் தற்போது கரோனா காலம் என்பதால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இ- ஆக்சன் முறையில் 740 டன் அம்மோனியம் நைட்ரேடை ஏலம் விடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்”. என சுங்கதுறை விளக்கம் அளித்துள்ளது.

SCROLL FOR NEXT