வாகனப் பெருக்கத்தைச் சமாளிக்கும் வகையில் வாகன உற்பத்தி நிறுவனங்களின் பணிமனைகள் மற்றும் வாகன விற்பனை நிலையங்களில் வாகனப் புகை பரிசோதனை மையங்கள் அமைக்க வேண்டும் என போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களின் புகை வெளியிடும் அளவைப் பரிசோதிக்கும் மையங்கள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் 2017-ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தீவிரமாக அமல்படுத்தத் தமிழக அரசும் அரசாணை பிறப்பித்தது. இருப்பினும் பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் வாகனப் புகை பரிசோதனை மையங்கள் அமைக்கப்படவில்லை.
தமிழகத்தில் மட்டும் 2.5 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் உள்ளன. ஆனால் 367 வாகனப் புகை பரிசோதனை மையங்கள் மட்டுமே உள்ளன. இதனால் வாகனங்கள் வெளியிடும் புகையின் அளவைப் பரிசோதிப்பதற்கு வாகன உரிமையாளர்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டியுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் வாகனப் புகை உமிழ்வு விதிகளை அமல்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் அங்கீகரிக்கப்பட்ட வாகன விற்பனை நிலையங்களின் பணிமனைகளில், வாகனப் புகை பரிசோதனை மையங்களைத் திறந்து வாகனப் புகை கக்கும் அளவைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரை சரக இணைப் போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் கூறுகையில், ’’பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாகன உற்பத்தி நிறுவனங்கள், அங்கீகரிக்கப்பட்ட வாகன விற்பனை நிலையங்களில் போதிய எண்ணிக்கையில் வாகனப் புகை பரிசோதனை மையங்கள் அமைப்பது தற்போதைய அவசியத் தேவையாக உள்ளது.
எனவே தமிழகத்தில் வாகன உற்பத்தியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட வாகன விற்பனை நிலையங்களின் பணிமனைகளில் அங்கீகரிக்கப்பட்ட வாகனப் புகை பரிசோதனை மையங்களைப் போதிய எண்ணிக்கையில் அமைக்க வேண்டும் என மாநிலப் போக்குவரத்து ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் வாகன விற்பனை நிலையங்களின் பணிமனைகளில் வாகனப் புகை பரிசோதனை மையங்கள் அமைக்க அந்தந்த வாகன உற்பத்தி நிறுவனங்களை அறிவுறுத்துமாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு வாகனப் புகை பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.