பவானிசாகர் அணை 
தமிழகம்

நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழை: வேகமாய் நிரம்பும் பவானிசாகர் அணை; கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

எஸ்.கோவிந்தராஜ்

பில்லூர் அணை திறப்பு மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கன மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்துத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சராசரியாக அணைக்கு விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் வரத்து உள்ளதால் அணையின் நீர் மட்டம் வேகமாக உயரத் தொடங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையை ஆதாரமாகக் கொண்டு 2.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகின்றன. ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும் இந்த அணையால் பூர்த்தியாகி வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணை இரு நாட்களுக்கு முன்பு நிரம்பியது.

அணையில் இருந்து உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்படுவதால், பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழைநீர் காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தெங்கு மரஹடா கிராமம் துண்டிக்கப்பட்டுள்ளது. மாயாற்று வெள்ளம் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது.

மாயாற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் தெங்கு மரஹடா கிராமம் துண்டிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் நீர் வரத்து

கடந்த 1-ம் தேதி பவானிசாகர் அணைக்கு விநாடிக்கு 694 கன அடியும், 2-ம் தேதியன்று 537 கன அடியும், 3-ம் தேதியன்று 1,072 கன அடியும் நீர் வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 1-ம் தேதியன்று 85.43 அடியாக இருந்தது. 4-ம் தேதி முதல் அணைக்கான நீர் வரத்து 15 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.

இந்நிலையில், கடந்த இரு நாட்களாக அணைக்கு சராசரியாக விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் வரத்துத் தொடர்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை கால்வாயில் 400 கன அடியும், காலிங்கராயன் கால்வாயில் 300 கன அடியும் நீர் திறக்கப்பட்டுள்ளது.

உயரும் நீர் மட்டம்

கடந்த 4-ம் தேதி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 87 அடியாக இருந்தது. ஒரே நாளில் நீர்மட்டம் இரண்டு அடி உயர்ந்து 5-ம் தேதியன்று 89 அடியாக உயர்ந்தது. இந்நிலையில், இன்று (ஆக.6) காலை 12 மணியளவில் அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 37 ஆயிரம் கன அடி நீர் வரத்து உள்ளது.

பவானிசாகர் அணையில் 105 அடி வரை நீரினைத் தேக்க முடியும் என்றாலும், குறிப்பிட்ட மாதங்களில், குறிப்பிட்ட அடி வரை மட்டுமே நீரினைத் தேக்கி வைக்க வேண்டும் என்ற விதிமுறையை பொதுப்பணித்துறை பின்பற்றி வருகிறது. எனவே, நீர் வரத்து அதிகரிக்கும்பட்சத்தில், பவானிசாகர் அணையில் இருந்து, பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்படலாம் என்பதால், கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணை - ஒரு பார்வை

பவானியாறும், மாயாறும் கலக்குமிடத்தில் சத்தியமங்கலத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவில், 1955-ம் ஆண்டு பவானிசாகர் அணை கட்டப்பட்டது. ரூ.10.50 கோடியில் கட்டப்பட்ட இந்த அணையில் 32 ஆயிரத்து 800 மில்லியன் கன அடி நீரைத் தேக்கி வைக்க முடியும். 120 அடி உயரம் கொண்ட அணையில், 105 அடிவரை நீரினைத் தேக்க முடியும். கல்லணையின் 9 வழிந்தோடிகள் மூலம் விநாடிக்கு ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 500 கன அடி நீரை அணையில் இருந்து வெளியேற்றலாம். கல்லணை மற்றும் மண்ணணையைச் சேர்த்து மொத்தம் 8.78 கி.மீ. நீளம் கொண்டது பவானிசாகர் அணை.

SCROLL FOR NEXT