தமிழகம்

தினமும் சராசரியாக 200 பேருக்குத் தொற்று: புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கரோனா

கரு.முத்து

புதுச்சேரியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருவது அப்பிரதேச மக்களைக் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

இதுகுறித்து புதுச்சேரி அரசு இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இதுவரை 4,621 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் இருவர், ஜிப்மரில் ஒருவர், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இருவர் என மொத்தம் 5 பேர் கரோவுக்குப் பலியாகி இருக்கிறார்கள். இதையடுத்து, மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று புதிதாக 195 பேருக்குத் தொற்று உறுதியானதை அடுத்து தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 4,621 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1,743 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள். இதுவரை 2,808 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று பாதிக்கப்பட்டோரில் 176 பேர் புதுச்சேரி மாவட்டத்தையும், 19 பேர் காரைக்காலையும் சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர, புதுச்சேரியில் 456 பேரும், ஏனாமில் 47 பேரும் லேசான பாதிப்புகளுடன் தத்தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களில் இன்று 129 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரியில் கரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை தினமும் சராசரியாக 200-ஐத் தொட்டு வருkகிறது. இது மற்ற மாநிலங்களைப் போல், புதுச்சேரியிலும் தொற்று பரவல் வேகம் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.

SCROLL FOR NEXT