குந்தா அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. 
தமிழகம்

நீலகிரியில் தொடரும் கன மழை: அவலாஞ்சியில் 581 மி.மீ. மழை பதிவு

ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாகத் தொடா்ந்து பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த காற்று வீசுவதால் நூற்றுக்கணக்கான மரங்கள் சாய்ந்தன.

மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், கடந்த நான்கு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கேரள மாநிலத்தையொட்டி உள்ள பகுதிகளில் மிக பலத்த மழையும், பிற பகுதிகளில் பரவலாகவும் மழை பெய்து வருகிறது.

உதகை-கூடலூர் சாலையில் விழுந்த மரத்தை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.

இதனால், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடா் மழை காரணமாக கடுமையான மேக மூட்டமும், குளிரும் நிலவி வருகிறது. மேலும், பலத்த காற்றால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரமும், தொலைத்தொடா்பும் துண்டிக்கப்பட்டுள்ளன.

கூடலூா் மற்றும் பந்தலூா் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடரும் கனமழையால் இந்தப் பகுதியிலுள்ள ஓவேலி ஆறு, முதுமலை புலிகள் காப்பகத்தின் மையப் பகுதியில் ஓடும் மாயாறு, பாண்டியாறு, புன்னம்புழா உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தொடா்ந்து நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தீட்டுக்கல் பகுதியில் வளர்ப்பு எருமைகள் மீது மரம் விழுந்ததில் அவை உயிரிழந்தன.

சூறாவளி காற்று வீசுவதால் நூற்றுக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. மரங்கள் மின்கம்பிகள் மீது சாய்ந்ததால் உதகை நகருக்கு இரண்டு நாட்களாக மின் விநியோகம் தடைப்பட்டது. இதனால் உதகை நகரம் இருளில் மூழ்கியது. மேலும், தண்ணீர் விநியோகமும் பாதிக்கப்பட்டது. மூன்று நாட்களாக தண்ணீர் விநியோகம் இல்லாமல் மக்கள் குடிநீருக்காக அலைந்து வருகின்றனர். மழை நீரை பிடித்து பிற தேவைகளுக்குப் பயன்படுகின்றனர்.

உதகை அருகே வீட்டுக்குத் பகுதியில் மரம் விழுந்ததில் மூன்று வளர்ப்பு எருமைகள் சிக்கி உயிரிழந்தன.

கன மழையால் முழு கொள்ளளவை எட்டிய குந்தா அணை திறக்கப்பட்டு, உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில், மழையில் பதிக்கப்பட்ட குந்தா, எமரால்டு, கன்னேரி மைந்தனை ஆகிய பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

மாவட்டத்தில் இன்று (ஆக.6) காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 581 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீ)

உதகை 42.1, நடுவட்டம் 226, கிளன்மார்கன் 212, குந்தா 58, எமரால்டு 175, அப்பர் பவானி 319, கூடலூர் 335, தேவாலா 220, பந்தலூர் 181, சேரங்கோடு 179 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 111.15 மி.மீ. மழை பதிவானது.

SCROLL FOR NEXT