மத்திய அரசைக் கண்டித்து சட்டப் பேரவையில் தீர்மானம் நிறை வேற்ற வலியுறுத்தி இடது சாரிகள், காங்கிரஸ், பாமக, மனித நேய மக்கள் கட்சி (மமக), புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் பேரவையி லிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் (திமுக), அ.சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட்), எம்.ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்), எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக), டாக்டர் கே.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), ஏ.கணேஷ்குமார் (பாமக) ஆகியோர், ‘‘சாலைப் போக்குவரத்து மசோதா, தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா ஆகியவற்றை கைவிட வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று (செப்டம்பர் 2) பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. எனவே, மத்திய அரசைக் கண்டித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’’ என வலியுறுத்தினர்.
அதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் பி.தனபால், ‘‘உறுப் பினர்களின் கருத்துகள் பேரவை யில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, அனைவரும் அமைதி யாக இருக்கையில் அமர வேண் டும்’’ என கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து குடிநீர் பிரச்சினை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணி பதிலளித்தார். அவர் பேசி முடித்ததும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மமக உறுப்பினர்கள் மத்திய அரசைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகை களை பேரவையில் உயர்த்திக் காட்டினர். இதனால் பேரவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களைக் கண்டித்த பேரவைத் தலைவர், ‘‘ஜனநாயக முறையில் கருத்துகளை தெரி விக்க அனுமதிக்கப்பட்ட நிலை யில் இதுபோல நடந்து கொள்வதை கண்டிக்கிறேன்’’ என எச்சரித்தார்.
அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாமக, மமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிராக கோஷமிட்டவாறு பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.