விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது குறித்து இந்து அமைப்புகளின் நிர்வாகிகளுடன் தலைமைச் செயலர் கே.சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்துஅமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, அவற்றுக்கு குறிப்பிட்ட காலம் வரை பூஜை செய்யப்படும். பின்னர், காவல்துறை அனுமதியுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலிலோ, நீர் நிலைகளிலோ கரைக்கப்படும்.
இது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வரும் 22-ம் தேதிகொண்டாடப்படுகிறது. கரோனாவைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்,மாநகராட்சிகள் தவிர மற்ற பகுதிகளில் சிறிய கோயில்கள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜிப்பது, ஊர்வலம் நடத்துவது போன்றவற்றுக்கு தடைஉள்ளது. எனவே, விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துவது குறித்து, தலைமைச் செயலகத்தில் இந்து அமைப்புகளின் நிர்வாகிகளுடன் தலைமைச் செயலர் கே.சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், உள்துறைச் செயலர்எஸ்.கே.பிரபாகர், டிஜிபி ஜே.கே.திரிபாதி, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்து முன்னணி, விஷ்வ இந்துபரிஷத், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, பெரிய சிலைகள் வைத்து வழிபாடு செய்வது, ஊர்வலம் நடத்துவதற்கான தடை குறித்து தலைமைச் செயலர் விளக்கினார்.
அதேநேரம், சிறிய சிலைகளை வைத்து வீடுகளில் பூஜித்து அவற்றை நீர் நிலைகளில் கரைப்பதற்கான அனுமதி மற்றும் வழிமுறைகள் வகுப்பது குறித்து இந்து அமைப்புகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று ஆலோசித்து அறிவிக்கப்படும் என தலைமைச் செயலர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற இந்து தமிழர் கட்சியினர், ‘‘தமிழக அரசு சார்பில் இப்தார் நோன்பு நடத்துவது போல், முதல்வர் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த வேண்டும்.
சமூக இடைவெளியைப் பின்பற்றி அரசு மதுபான கடைகளை திறந்துள்ளதுபோல், கட்டுப்பாடுகளுடன் கூடிய கோயில் தரிசனத்துக்கு அறநிலையத் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.