தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சளி மாதிரி சேகரிப்பு மையத்தை தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் உடனிருந்தனர். 
தமிழகம்

தூத்துக்குடியில் கரோனா இறப்பு விகிதம் குறைவு: சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா இறப்பு விகிதம் குறைவாகவே இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் கரோனா தடுப்புப் பணிகளை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று நேரில் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அதில் பங்கேற்ற ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம், தற்போதைய நிலை, கரோனா பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று நேரில் ஆய்வு செய்தார். மேலும், தூத்துக்குடி மாநகராட்சி கேவிகே நகரில் நடைபெற்ற காய்ச்சல் சிறப்பு முகாமையும் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா மரணங்கள் மிகவும் குறைவு தான். தமிழகத்தில் கரோனா மரணங்கள் விகிதம் 1.62 சதவீதமாக உள்ளது. ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் 0.7 சதவீதமாகவே இருக்கிறது.

ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அலட்சியம் காட்டாமல் முகக்கவசம் அணிய வேண்டும். அதன் மூலம் ஊரகப் பகுதிகளில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தலாம்.

தமிழகத்தில் கரோனா நோயாளிகளுக்கு 70 ஆயிரமாக இருந்த படுக்கை வசதிகள், தற்போது 1.18 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கரோனா சிகிச்சை மையம், கரோனா நல மையம், கரோனா கவனிப்பு மையம், வீட்டுத் தனிமை என தொற்றின் தாக்கத்துக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது படுக்கை வசதி இல்லாமல், ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் ரூ.75 கோடி மதிப்பிலான பணிகள் முடிவடைந்துள்ளது. தனியாக கட்டிட வசதியுடன் 50 படுக்கைக்கு மேல் இருந்தால் அங்கு ஆக்சிஜன் இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதல் கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் 104 எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். முகக்கவசம், பாதுகாப்பு உடை உள்ளிட்ட கரோனா மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பாக கையாள வேண்டும். அலட்சியமாக கையாளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் கிருஷ்ண லீலா, உமா சங்கர், மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன், மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT