திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் மற்றும் மும்மூர்த்திகளை தரிசிக்கவும், அருவியில் குளிக்கவும் ஆண்டுதோறும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
திருமூர்த்தி அணை மூலமாக உடுமலை நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் 5 லட்சம் பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. சுமார் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினங்களில் இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்வுக்காக, திருமூர்த்திமலை கோயிலுக்கு ஆயிரக்கணக்கானோர் வருவது வழக்கம். இத்தகைய வழிபாட்டின்போது பயன்படுத்தப்படும் தடைசெய்யப்பட்ட பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பிகள், துணிகள் உள்ளிட்டவை விட்டுச் செல்லப்படுகின்றன. அவை நீரோடையில் அடித்துச் செல்லப்பட்டு அணையில் தேங்குகின்றன.
இதுபோன்ற நிகழ்வுகள், அணையின் உட்பகுதியிலும் சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. சிலர் இறந்தவர்களின் சாம்பலை கரைப்பதுடன், ஆடைகளை விட்டுச் செல்கின்றனர். இதனால், டன் கணக்கில் கழிவுப்பொருட்கள் சேகரமாகும் குப்பைத் தொட்டியாக, திருமூர்த்தி அணை மாறி வருகிறது.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புணர்வு இயக்க மாநில இணைச் செயலாளர் துரை கூறும்போது, “இது மாபெரும் தவறு. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
திருமூர்த்தி அணையை நம்பி, பல லட்சம் பொதுமக்களும், விவசாயிகளும் உள்ளனர். கோயிலுக்கு வருவோர், சுற்றுலா பயணிகளால் அணைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு இந்து சமய அறநிலையத்துறை, பொதுப்பணி, வனம், உள்ளாட்சித் துறைகள், பொதுமக்கள் ஆகியோர் கூட்டாக பொறுப்பேற்க வேண்டும்.
இயற்கை வளங்களை எதிர்கால தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டும். இயற்கை வளத்தைக் காக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
கோயில் நிர்வாக அதிகாரி கூறும்போது, “கோயில் பகுதியில் பிளாஸ்டிக் கொண்டு செல்ல தடை இருந்தும், சிலர் தெரியாமல் கொண்டு செல்கின்றனர். இவை, ஊழியர்கள் மூலமாக தினமும் அப்புறப்படுத்தப்படுகின்றன” என்றார்.
திருமூர்த்தி அணை உதவி செயற்பொறியாளர் கூறும்போது, “அணை சுமார் 6 கி.மீ. சுற்றளவிலும், 700 ஏக்கர் பரப்பளவிலும் அமைந்துள்ளது.
60 அடி ஆழம் கொண்டது. திதி கொடுப்பது உள்ளிட்ட சமயம் சார்ந்த நிகழ்வுகள் என்பதால், அவற்றை தடுக்க முடிவதில்லை. சுற்றிலும் பாதுகாப்பு வேலி இல்லாததால், அணையில் தடைசெய்யப்பட்ட கழிவுப்பொருட்கள் போடுவது, குளிக்கச் சென்று உயிரிழப்பது உள்ளிட்ட நிகழ்வுகள் அதிகரிக்கின்றன. பொதுமக்கள் செல்லும் வழிகளை ஆய்வு செய்து, அங்கெல்லாம் தடுப்பு வேலிகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.