கரோனா ஊரடங்கு காலத்திலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஆவின் நிறுவனம் கை கொடுத்துள்ளது. தினமும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதலாக உயர்ந்ததால், ரூ. 420 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
மேலும், ஆட்டோக்காரர்களையும் முகவர்களாக்கும் திட்டம் மூலம் மக்களுக்கு எளிதில் பால் கிடைப்பதோடு, ஆவின் நிறுவனத்தின் வருவாயும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கரோனா ஊரடங்கு காலத்திலும் பால் உற்பத்தியாளர்களான விவசாயிகளுக்கு தமிழக அரசின் பால்வளத்துறையின் ஆவின் நிறுவனம் கை கொடுத்து வருகிறது. தொற்றுநோய் அச்சத்தைப்போக்கி விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்வதோடு, தமிழகம் முழுவதும் பால் மற்றும் உபபொருட்களை தங்குதடையின்றி விற்பனையும் செய்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் பால் விற்பனை 11.50 லட்சத்திலிருந்து 13.5 லட்சம் லிட்டராக ஊரடங்கு தொடரும் கடந்த 4 மாதத்தில் உயர்ந்துள்ளது. அதன்படி தற்போது தினமும் பால் கொள்முதல் சுமார் 40 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 25 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பால் கொள்முதல் 2019 ஏப்ரல், மே 2019 மாதங்களில் நாளொன்றுக்கு 32.34 லட்சம் லிட்டராக இருந்தது.
தற்போது அதே, 2020 ஏப்ரல், மே 2020 மாதங்களில் நாளொன்றுக்கு 34.50 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. தற்போது நாளொன்றுக்கு 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: கரோனா ஊரடங்கு காலத்திலும் பொதுமக்களுக்கு ஆவின் பால் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் விற்பனை அளவு தினமும் 10.78 லட்சம் லிட்டரிலிருந்து 11.32 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.
கடந்தாண்டு 2019 ஏப்ரல், மே மாதங்களில் ரூ.327.37 கோடி ரூபாயாக இருந்த விற்பனை வருவாய், தற்போது 2020 ஏப்ரல், மே மாதங்களில் ரூ.420.55 கோடி ரூபாயாக உயர்ந்து, 28 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் ஏப்ரல், மே மாதங்களில் ரூ.2.06 கோடி நஷ்டத்திலிருந்த இணையம், தற்போது அதே ஏப்ரல், மே மாதத்தில் ரூ.10.35 கோடி லாபத்துடன் செயல்படுகிறது.
ஆவின் வருவாயைப் பெருக்கும் வகையில் ஊரடங்கில் வாழ்வாதாரம் இழந்துள்ள ஆட்டோக்காரர்களையும் ஆவின் முகவர்களாக்கும் வேலைகள் நடந்து வருகின்றன.
இதன் மூலம் ஆவின் பால் விற்பனை அதிகரிப்பதோடு, தட்டுப்பாடின்றி அனைவருக்கும் பால் கிடைக்கும். இந்தியாவில் பால் உற்பத்தி நிறுவனங்களில் அமுல் நிறுவனத்திற்கு அடுத்து ஆவின் 2 வது இடத்தில் உள்ளது, என்றார்.