அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்: கோப்புப்படம் 
தமிழகம்

புதுச்சேரியில் ஒரே நாளில் கரோனா தொற்றுக்கு 7 பேர் உயிரிழப்பு; புதிதாக 286 பேருக்குத் தொற்று உறுதி

அ.முன்னடியான்

புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 7 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும், புதிதாக 286 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (ஆக.5) கூறியதாவது:

"புதுச்சேரியில் அதிகபட்சமாக 1,024 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் எப்போதும் இல்லாத அளவுக்கு புதுச்சேரியில் 182 பேர், காரைக்காலில் 21 பேர், ஏனாமில் 80 பேர், மாஹேவில் 3 பேர் என மொத்தம் 286 பேருக்குத் (27.9 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நான்கரை மாதங்களில் இல்லாத அளவு அதிகமானதாகும்.

இதில் 114 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 54 பேர் ஜிப்மரிலும், 2 பேர் கோவிட் கேர் சென்டரிலும், 21 பேர் காரைக்காலிலும், 80 பேர் ஏனாமிலும், 3 பேர் மாஹேவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 பேர் மருத்துவமனைகளில் அனுமதிப்பதற்காக காத்திருப்பில் உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கோரிமேடு இந்திரா நகரைச் சேர்ந்த 48 வயது ஆண் நபர் சிகிச்சை பலனின்றி ஜிப்மரில் இன்று காலை உயிரிழந்தார். இதேபோல், முதலியார்பேட்டையைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி, வில்லியனூர் வி.மணவெளியைச் சேர்ந்த 74 வயது முதியவர், சண்முகாபுரத்தைச் சேர்ந்த 77 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் உயிரிழந்தனர். அதேபோல் ஏனாம் பிராந்தியத்தில் 2 ஆண், ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை மொத்தம் 4,432 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 275 பேரும், ஜிப்மரில் 418 பேரும், கோவிட் கேர் சென்டரில் 299 பேரும், காரைக்காலில் 78 பேரும், ஏனாமில் 191 பேரும், மாஹேவில் 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரியில் 423 பேர், ஏனாமில் 21 பேர் என மொத்தம் 444 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதனால் மருத்துவமனைகளில் அனுமதிப்பதற்காக காத்திருப்போர் 12 பேரையும் சேர்த்து மொத்தம் 1,721 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 40 பேர், ஜிப்மரில் 16 பேர், கோவிட் கேர் சென்டரில் 31 பேர், காரைக்காலில் 2 பேர், ஏனாமில் 20 பேர் என மொத்தம் 109 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,646 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 43 ஆயிரத்து 134 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 38 ஆயிரத்து 73 பரிசோதனைகள் முடிவில் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது. 402 பரிசோதனைகள் முடிவுக்காகக் காத்திருப்பில் உள்ளன.

நேற்று முன்தினம் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகளை அழைத்துப் பேசினேன். அப்போது, 4 தனியார் மருத்துவக் கல்லூரியில் தலா 100 படுக்கைகள் ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்துள்ளனர். அதேபோல், அறுபடை மருத்துவக் கல்லூரியில் 400 படுக்கைகள் கேட்டோம். அதில், 300 படுக்கைகள் வழங்குவதாக ஏற்றுக் கொண்டுள்ளனர். தற்போது அங்கு 50 படுக்கைகள் உள்ளன. இன்னும் 250 படுக்கைகளை 5 நாட்களுக்குள் ஏற்பாடு செய்வதாகக் கூறியுள்ளனர்.

லட்சுமிநாராயணா மருத்துவக் கல்லூரியில் தற்போது 60 படுக்கைகள் உள்ளன. அங்கு மேலும் 140 படுக்கைகளை ஏற்பாடு செய்வதற்கு 5 நாட்கள் கேட்டுள்ளனர். இதன் மூலம் 6 மருத்துவக் கல்லூரியில் நமக்கு 900 படுக்கைகள் கிடைக்கும். தினமும் வரும் கரோனா நோயாளிகளில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஜிப்மர் மருத்துவமனையிலும், மற்றவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் அனுமதிக்கப்படுகின்றனர்.

நேற்று 6 ஆம்புலன்ஸுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில், சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் இருப்பார்கள். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனே சென்று சிகிச்சை அளிப்பார்கள். அங்கு நோயாளி உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தால் அவர்களை மருத்துவமனையில் சேர்ப்பார்கள்.

மேலும், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிர்வாகிகளை அழைத்துப் பேசியுள்ளேன். மருத்துவக் காப்பீடு திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர். அதேபோல், கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளில் சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்குத் தனியாக டயாலிசிஸ் செய்வதற்கு பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தினமும் என்னென்ன செய்ய முடியுமோ, அதனைக் கலந்தாலோசித்து செய்து வருகிறோம்.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் இதுவரை சாப்பாடு உள்ளிட்ட எதற்கும் நம்மிடம் பணம் கேட்கவில்லை. தற்போது நாள் ஒன்றுக்கு, ஒரு நோயாளிக்கு ரூ.200 வீதம் தனியார் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கு வழங்குவதாகக் கூறியுள்ளேன். அதேபோல், மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்குத் தேவையான பிபிஇ கிட் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை 6 ஆம்புலன்ஸ், 10 ஆம் தேதி 6 ஆம்புலன்ஸ் என 12 ஆம்புலன்ஸ் வாங்கவும் டெண்டர் கோர உள்ளோம். மேலும், 3 மாதங்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்".

இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT