செஞ்சி அருகே கொத்தமங்கலம் பகுதியில் கரோனா வைரஸால் இறந்தவரின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. 
தமிழகம்

கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை பூர்வீக கிராமத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு

எஸ்.நீலவண்ணன்

கரோனா தொற்றால் இறந்தவரின் உடலை பூர்வீக கிராமத்தில் அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் இன்று காலை செஞ்சி அருகே கொத்தமங்கலம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

செஞ்சி அருகே நரசிங்கராயன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சர்தார் பாஷா (53). இவரின் பூர்வீக கிராமம் மேல் எடையாளம் ஆகும். இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 24-ம் தேதி வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் 25-ம் தேதி கரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று (ஆக.4) காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரின் உறவினர்கள் பூர்வீக கிராமமான மேல் எடையாளம் கிராமத்தில் அடக்கம் செய்ய முடிவெடுத்தனர்.

இத்தகவல் அறிந்த மேல் எடையாளம் கிராம மக்கள், "எங்கள் கிராமத்தில் அடக்கம் செய்யக்கூடாது. அவர் வசித்து வந்த செஞ்சியில் அடக்கம் செய்து கொள்ளட்டும்" என எதிர்ப்புத் தெரிவித்து நேற்று இரவு கிராம சாலைகளில் மரங்களை வெட்டி சாலையில் போட்டும், டிராக்டர்களை வழியில் நிறுத்தியும் போக்குவரத்தைத் தடை செய்தனர்.

இத்தகவல் அறிந்த இறந்தவரின் உறவினர்கள் செஞ்சியில் அடக்கம் செய்து கொள்வதாக வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து, இன்று (ஆக.5) காலை செஞ்சி அருகே கொத்தமங்கலம் பகுதியில் சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படி சர்தார் பாஷாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT