ஏற்காட்டில் தினந்தோறும் மழை பெய்து வரும் நிலையில் இரவில் அங்கு கடும் குளிரும், பனிமூட்டமும் நிலவுகிறது.
கரோனா ஊரடங்கு காரணமாக ஏற்காடு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால், நடப்பாண்டில் கோடை விழா ரத்து செய்யப்பட்டது. தற்போது, தென்மேற்குப் பருவமழை தொடங்கியது முதல் ஏற்காட்டில் தினந்தோறும் மழை பெய்து வருவதால், அங்குள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது:
ஊரடங்கு காரணமாக, சுற்றுச்சூழல் மாசு பெருமளவு குறைந்துள் ளதை உணர முடிகிறது. ஏற்காட்டில் தினமும் மழை பெய்து வருவதால், விவசாயப் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததுபோல தற்போது தட்பவெப்ப நிலை நிலவுகிறது. மலைகளில் ஆங்காங்கே திடீர் அருவிகள் உருவாகியுள்ளன.
தினமும் மாலையில் பனிமூட்டம் ஏற்பட்டு எதிரே இருப்பவரைக் கூட காண முடியாத நிலையும், இரவில் கடும் குளிரும், பகலில் குளுகுளு சீதோஷ்ண நிலையும் நிலவுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.