பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

கரூர் மாவட்டத்தில் காவல்துறையினர் 29 பேர் உள்பட 37 பேருக்குக் கரோனா தொற்று

க.ராதாகிருஷ்ணன்

கரூர் மாவட்டத்தில் காவல்துறையினர் 29 பேர் உள்ளிட்ட 37 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை நேற்று (ஆக.4) 602 ஆக உயர்ந்தது. மேலும், மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று (ஆக.5) ஒரே நாளில் 37 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் காவல்துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் என 29 பேருக்கு இன்று ஒரே நாளில் தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் கரூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர், முதல்நிலை காவலர் என இருவருக்குத் தொற்று ஏற்பட்டு குணமடைந்து பணிக்குத் திரும்பிய நிலையில், கரூர் நகர போக்குவரத்துக் காவலர் ஒருவருக்கும் மேலும் அவரை தொடர்ந்து மேலும் சில போக்குவரத்துக் காவலர்கள், அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர் ஆகியோருக்கும், மேலும் அவர்கள் தொடர்ந்து காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள அமைச்சுப் பணியாளர், டிஎஸ்பி அலுவலகத்தில் பணியாற்றிவர், தென்னிலை எஸ்.ஐ. ஆகியோருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் கடந்த இரு நாட்களுக்கு முன் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் காவல்துறையினர், அங்குள்ள யூனிட்டுகளில் பணியாற்றும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோருக்குக் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியான நிலையில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்கள் 7 பேர் மற்றும் காவல்துறையினர் என காவல்துறையைச் சேர்ந்த 29 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது காவல்துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT