வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பாதுகாப்பான பகுதிக்கு செல்லும் புரமணவயல் பழங்குடியின மக்கள். 
தமிழகம்

நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழை: பழங்குடியினர் கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. பழங்குடியினர் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால், அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த 1-ம் தேதி இரவு முதல் பலத்த காற்றுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரமும், தொலை தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளன.

தொடர் மழையால், அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, பைகாரா உட்பட பெரும் பாலான அணைகளில், 5 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மஞ்சூர் அருகே, குந்தா அணையில் மொத்த கொள்ளளவான 89 அடியில் 86.5 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள ஓவேலி ஆறு, முதுமலை புலிகள் காப்பகத்தின் மையப் பகுதியில் ஓடும் மாயாறு, பாண்டியாறு, புன்னம்புழா உட்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேன்வயல் மற்றும் இருவயல் பழங்குடியினர் கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்ததால், அங்கு வசிக்கும் 20 குடும்பங்கள் அருகில் உள்ள புத்தூர்வயல் பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புரமணவயல் பகுதியில் வசித்து வந்த 47 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர், அருகில் உள்ள அத்திபாலி பள்ளியில் தங்கவைத்துள்ளனர்.

மிக கனமழை பெய்யும்

நீலகிரி மாவட்ட பகுதிகளில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீ): அப்பர் பவானியில் 308 மி.மீ, அவலாஞ்சியில் 220 மி.மீ, மழை பதிவாகியுள்ளது. உதகை 31.2, நடுவட்டம் 95, கிளன்மார்கன் 100, குந்தா 55, எமரால்டு 112, கேத்தி 12, பாலகொலா 36, கோத்தகிரி 3, கூடலூர் 201, தேவாலா 103, பந்தலூர் 108 மி.மீ, மழை பதிவானது.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் சென்னையில் தெரிவித்ததாவது: தமிழகத்தில் தென்மேற்கு பருவக் காற்று காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பிற மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், மேல்பவானியில் 310 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT