கரோனா பரவல் தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்கள், காவல் துறையினர், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் கரோனாவால் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.
இதையடுத்து காவல் துறையில், பணியில் இருந்தபோது கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் பட்டியலை விரைவில் அரசுக்கு அனுப்பி அவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணியை பெற்றுக் கொடுக்க டிஜிபி ஜே.கே.திரிபாதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக பெருநகர, மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
காவல்துறையைச் சேர்ந்த 10 பேர் இதுவரை கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 8 பேரின் முழு விவரம் டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2 பேரின் (விருதுநகர், மதுரை) விவரம் இன்னும் அனுப்பப்படவில்லை. அதை விரைந்து அனுப்பி வைக்க அந்தந்த மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.