தமிழகம்

கோயம்பேடு சந்தையை திறக்க கோரி ஆகஸ்ட் 10-ம் தேதி கடையடைப்பு போராட்டம்: ஏ.எம்.விக்கிரமராஜா அறிவிப்பு

செய்திப்பிரிவு

கோயம்பேடு சந்தையை திறக்கக் கோரி வரும் 10-ம் தேதி தமிழகம் முழுவதும் காய், கனி, பூ சந்தைகளில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

கோயம்பேடு சந்தையில் சிலதொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோயம்பேடு சந்தை தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டது.

திருமழிசையில் இருந்து கோயம்பேடுக்கு மீண்டும் சந்தையை மாற்ற வேண்டும் என்றுவியாபாரிகள் கோரிக்கை வைத்துவருகின்றனர். இருப்பினும், சந்தையை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இதுதொடர்பாக சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்குப் பிறகு, ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோயம்பேடு சந்தையை திறப்பதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை 2 முறை சந்தித்து பேசியுள்ளோம். கடைசி முறை சந்தித்தபோது கோயம்பேடு சந்தையை திறப்பதற்கான வாய்ப்புகளை எடுத்து கூறினார். வியாபாரிகள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

எனவே, கோயம்பேடு சந்தை உட்பட, தமிழகம் முழுவதும் அனைத்து சந்தைகளையும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

திருமழிசை காய்கறி சந்தையில் மழையின் காரணமாக பல லட்சம் மதிப்பிலான காய்கறிகள் வீணாகி வருகின்றன. எனவே, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முதற்கட்டமாக வரும் 10-ம் தேதி தமிழகம் முழுவதும் காய், கனி, பூ சந்தைகளில் முழுமையாக கடைகளை அடைத்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

அதன் பிறகும் அரசு கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT