இ-பாஸ் வழங்கும் நடைமுறையில் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூர் மண்டலத்துக்குட்பட்ட எண்ணூர் பகுதியில் அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சென்னையில் தீவிர காய்ச்சல்முகாம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், கரோனா தொற்று குறைந்து வருகிறது. சென்னையில் பின்பற்றும்வழிமுறைகளை பிற மாவட்டங்களிலும் பின்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையில் உள்ள சாதக, பாதகங்களை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதேநேரம் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் கட்டாயப்படுத்தி திணிக்க நினைப்பதை நாங்கள் எதிர்க்கிறோம்.
மக்கள் எதிர்பார்ப்பு
இ-பாஸ் நடைமுறையில் மக்கள் தளர்வை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். எனவே, இ-பாஸ் வழங்குவதில் தளர்வுகள்அளிப்பது தொடர்பாக முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, ‘‘தமிழக பாஜகதுணைத் தலைவராக உள்ள நயினார் நாகேந்திரன் அதிமுகவுக்கு வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா’’ என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், ‘‘அதிமுகவில் ஆரம்ப காலத்தில் இருந்தே பணியாற்றியவர் நயினார் நாகேந்திரன். பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். மக்களுக்கு மிகுந்த பரிட்சயமான அவரைப்போன்றவர்கள் அதிமுகவுக்கு வருவதை யாரும் மறுக்கமாட்டார்கள். அவருடன் சென்ற முன்னாள்எம்எல்ஏ சீனிவாசன் வந்துவிட்டார். தொண்டர்கள் அவரை ஏற்றுக் கொள்வார்கள்’’ என்றார்.