ரோட்டரி சங்கங்கள், மற்ற பிற தன்னார்வ அமைப்புகளுடன் கைகோத்து கரோனா தொற்று இல்லாத மாதிரி வார்டுகளை உருவாக்கும் புது முயற்சியை மதுரை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் கடந்த 2 மாதமாக கரோனா தொற்று மிக அதிகளவில் பரவியது. சென்னைக்கு அடுத்து தமிழகத்திலே மிக குறுகிய காலத்தில் மிக அதிக பரவல் விகிதம் இருந்தது
மதுரையில்தான் என்று சுகாதாரத்துறையே கவலையடைந்து இருந்தது. தற்போது மதுரையில் கரோனா தொற்று குறையத்தொடங்கியுள்ளது. சிகிச்சையில் இருந்து 80 சதவீதம் நோயாளிகள் சிகிச்சையில் முழுகுணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
தற்போது மாநகராட்சியின் அடுத்த முயற்சியாக, ரோட்டரி சங்கங்கள், பிற தன்னார்வ அமைப்புகளுடன் கைகோர்த்து மண்டலம் வாரியாக கரோனா தொற்று இல்லாத வார்டுகளை உருவாக்கும் திட்டத்தை தொடங்க உள்ளது.
முதற்கட்டமாக நேற்று மாநகராட்சி ஆணையாளர் விசாகன், ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தரவேல், சசிபோம்ரா, துணைஆளுநர்கள் சாந்தாராம், ஆனந்தராஜ், அசோக், முன்னாள் பொது சுகாதாரத் துறைத் துணை இயக்குநர் குழந்தைசாமி ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறியதாவது:
மதுரை மாநகராட்சி பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பதற்கு பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. அதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 16 நடமாடும் மருத்துவ வாகனங்கள், இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் மருந்தகம், சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம்கள் என தினந்தோறும் மொத்தம் 155 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த மருத்துவ முகாம் நகர்புற ஆரம்ப நிலையங்கள், நடமாடும் மருத்துவ முகாம்கள், காய்ச்சல் கணக்கெடுப்பு குழுவினர், அரசு ராஜாஜி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் இருந்து பெறப்படும் அறிக்கையின் அடிப்படையில் காய்ச்சல் அதிகமாக உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சியுடன் ரோட்டரி சங்கத்தினர் உள்ளிட்ட சமூக அணைப்பினர் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், ஒவ்வொரு வார்டுகளிலும் குடியிருப்போர் நலச்சங்கங்களை தத்தெடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து மாத்திரைகளையும், தன்னார்வலர்கள், கபசுர குடிநீரினை காய்ச்சி மாநகராட்சிக்கு வழங்குவது போன்று ரோட்டரி சங்கத்தினர் வழங்கலாம். மாநகராட்சியால் வழங்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரூ.100 மருந்து பெட்டகங்களை வாங்கி பொதுமக்களுக்கு வழங்கலாம்.
ஏதேனும் ஒரு வார்டினை தேர்ந்தெடுத்து கரோனா வைரஸ் தொற்று இல்லாத மாதிரி வார்டாக மாற்றுவதற்கு முன்வர வேண்டும். பொதுமக்கள் முகக்கவசம் அணிவது குறித்தும், கைகளை சுத்தமாக கழுவுவது குறித்தும், சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேற்கண்ட கரோனா தடுப்பு பணிகளில் ரோட்டரி சங்கத்தினர் தங்களை ஈடுபடுத்தி மாநகராட்சியின் கொரோனா தடுப்பு பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.