பூரண சுந்தரி 
தமிழகம்

எண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று நிரூபித்த மாற்றுத்திறனாளி பூரண சுந்தரி- பார்வை சவாலே சாதிக்கத் தூண்டியதாக பேட்டி

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

எண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல என்பதற்கு உதாரணமாக இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வாகியுள்ளார் மதுரையைச் சேர்ந்த பார்வை சவால் கொண்ட மாற்றுத்திறனாளி பூரண சுந்தரி. அவரின் சாதனை அனைவருக்கும் முன்னுதாரணமாக மாறியுள்ளது.

ஐஏஎஸ் தேர்வில் 286-வது இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார்.

2019-ம் ஆண்டுக்கான இந்திய குடிமைப் பணிகள் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 2019-ம் ஆண்டு எழுதிய தேர்வில் 829 பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மதுரை சிம்மக்கல் அருகேயுள்ள மணிநகரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன்- ஆவுடை தேவி தம்பதி. இவர்களின் பார்வை சவால் கொண்ட மாற்றுத்திறனாளி மகள் தான் பூரண சுந்தரி.

பூரண சுந்தரியின் 5 வயதில் அவரது பார்வை நரம்பு சுருங்கியதால் பார்வையை இழந்தார். இருந்தபோதிலும் தன்னம்பிக்கையோடு தனது கல்வியைத் தொடர வேண்டும் என்று எண்ணி ஒன்றாம் வகுப்பிலிருந்தே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுவந்துள்ளார்.

சம்மட்டிபுரத்தில் உள்ள கேஎன்பிஎம் எம்பிஎஸ் உயர்நிலைப் பள்ளியில் மதுரை ஒருங்கிணைந்த கல்வி IEDSS-ல் சிறப்புகல்வி திட்டத்தின் கீழ் பயின்றார்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண்னும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1092 மதிப்பெண் பெற்ற நிலையில் இளங்கலை இலக்கியம் (ஆங்கிலம்) பயின்றுவந்துள்ளார்.

சாதிக்கத் தூண்டிய சவால்கள்:

சிறு வயதிலிருந்தே ஒரு மாற்றுத்திறனாளியாக கல்வி கற்பதில் எதிர்கொள்ள வேண்டியிருந்த சவால்கள் தான் தன்னை சாதிக்கத் தூண்டியதாக பூரண சுந்தரி கூறுகிறார்.

இதனால், கடந்த 2016-ம் ஆண்டு முதல் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு, வங்கி போட்டித் தேர்வு, குடியுரிமை பணி தேர்வு என 20-க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகளை மனம் தளராமல் எழுதியுள்ளார்.

போட்டித் தேர்வுகளில் தோல்வி அடைந்தாலும் கூட நிச்சயம் ஒருநாள் சிவில் சர்வீஸ் தேர்வில் வென்றுவிட வேண்டும் என்ற முனைப்போடு தேர்வுகளை எழுதிவந்தார். கடந்த 2018-ம் ஆண்டு வங்கித் தேர்வில் வெற்றி பெற்று அரசு ஊரக வளர்ச்சி வங்கியில் கிளர்க்காக பணிபுரிந்து வரும் நிலையில் 4-வது முறையாக கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற குடியுரிமை பணிகளுக்கான தேர்வை எழுதியுள்ளார்.

தேர்வில் 286 இடத்தில் வெற்றியும் கண்டுள்ளார் பூரண சுந்தரி.

தேர்வு வெற்றி குறித்து பேசிய பூரண சுந்தரி, "நான் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக இருந்துகொண்டு இந்த வெற்றி இலக்கை அடைய எண்ணற்ற சவால்களை சந்தித்தாலும் எனது பெற்றோரின் பேருதவி அவற்றை லகுவாக்கிவிட்டது.

அவர்கள் பாடங்களை எனக்குப் படித்து காண்பிக்க அதனைக் கேட்டு மனனம் செய்து கற்றுகொண்டேன். போட்டி தேர்விற்காக நான் சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கிப் பயின்றபோது அங்குள்ள நண்பர்கள் கொடுத்த உற்சாகம் என்னை வெற்றியாளராக உருவாக்கியுள்ளது.

சிறு வயது முதல் எனது அம்மா சொல்லித் தரும் பாடங்களை நன்கு கவனித்து கற்றுகொண்டதால் போட்டித் தேர்வுகளிலும் அது உதவியாக இருந்தது. என் தாய் எனக்கு ஆசிரியராகவும் இருந்தார்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்ற எண்ணமே எனக்கு வராத அளவிற்கு எனது பெற்றோர் என்னைப் பார்த்துகொண்டனர்.

பெற்றோருடன் பூரண சுந்தரி

நான் சந்தித்த சவால்களே என்னை ஆட்சிப் பணியில் அமர வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் நிர்வாக ரீதியாக முடிவுகளை எடுக்கவும் திட்டங்களை வகுக்கவும் வேண்டும் என்று தூண்டியது.

அது இப்போது சாத்தியமாகியுள்ளது.

குடியுரிமை ஆட்சிப்பணியில் இருந்து அரசின் திட்டங்களை மக்களுக்கு நேரடியாக கொண்டுசேர்க்க ஏழை எளிய மக்களுக்கு பாலமாக இருக்க விரும்புகிறேன்.

என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து போராடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்" என்றார்.

SCROLL FOR NEXT