மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் தென்காசி மாவட்ட அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பலத்த மழையும், மற்ற பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. குளுகுளு காற்றுடன் சாரல் மழை அவ்வப்போது பெய்வதால் குளிர்ச்சி நிலவுகிறது.
இன்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணைப் பகுதியில் 52 மி.மீ. மழை பதிவானது. மற்ற இடங்களில் பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்) விவரம் வருமாறு:
கருப்பாநதி அணை, அடவிநயினார்கோவில் அணையில் தலா 48, செங்கோட்டை- 35, தென்காசி- 22, கடனாநதி அணை, ராமநதி அணையில் தலா 18, ஆய்க்குடி- 7.20, சங்கரன்கோவில்-1.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 85 அடி உயரம் உள்ள கடனாநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9.50 அடி உயர்ந்து 51.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 391 கனஅடி நீர் வந்தது. 10 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. 84 அடி உயரம் உள்ள ராமநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7.50 அடி உயர்ந்து 66.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 216 கனஅடி நீர் வந்தது. 3 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
இதேபோல், 72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணை நீர்மட்டம் 7 அடி உயர்ந்து 40.68 அடியாக இருந்தது. 133.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் கோவில் அணை நீர்மட்டம் 9 அடி உயர்ந்து 91 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 197 கனஅடி நீர் வந்தது. 5 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 36.10 அடி உயரம் உள்ள குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் இருப்பதால் அணைக்கு வரும் 49 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் நேற்று இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் இன்றும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின்றி குற்றாலம் வெறிச்சோடி காணப்படுகிறது.
ஐந்தருவிக்கு மேல் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய காட்டுப்பன்றி கரையேற முடியாமல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டது. ஐந்தருவியில் மேல் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்த அந்த காட்டுப்பன்றி உயிரிழந்தது. அருவித் தடாகத்தில் கிடந்த காட்டுப்பன்றி உடலை வனத்துறையினர் மீட்டனர்.
கால்நடை மருத்துவர் உடற்கூறாய்வு செய்தார். பின்னர், மலைப் பகுதியில் காட்டுப்பன்றி புதைக்கப்பட்டது. சுமார் 100 கிலோ எடையுள்ள அந்த காட்டுப்பன்றிக்கு 8 வயது இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.