குடிமைப்பணி தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுமார் 44 பேருக்கும், தமிழகத்தில், புதுவையில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
“இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு நடத்திய போட்டித் தேர்வுகளின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்ற 829 பேருக்கும் பாமக சார்பில் எனது உளமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குடிமைப்பணி தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுமார் 44 பேருக்கும் எனது வாழ்த்துகள். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் தேசிய அளவில் 7-ஆவது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும், தேசிய அளவில் 47-ஆவது இடத்தையும் பிடித்துள்ள மாணவி ஐஸ்வர்யா கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பம் எனக்கு அறிமுகமான குடும்பம்.
அதேபோல், தேசிய அளவில் 36-ஆவது இடத்தை பிடித்துள்ள காரைக்காலைச் சேர்ந்த மாணவி சரண்யா புதுவையில் முதல் இடத்தை பிடித்துள்ளார். தமிழக அளவில் முதல் இரு இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிக்கும், புதுவையில் முதலிடம் பிடித்த மாணவிக்கும் எனது சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி வரும் குடிமைப் பணி தேர்வுகளில் தமிழகத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். அதற்காக இப்போதிலிருந்தே படிக்கத் தொடங்கி, வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.