மாநகராட்சியின் தடுப்பு நடவடிக்கைகளால் மதுரையில் கரோனா பாதிப்பு குறையத் தொடங்கிள்ளது.
தமிழகத்தில் நேற்று வரை 2 லட்சத்து 52 ஆயிரத்து 59 பேர் கரோனா தொற்று நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் 1 லட்சத்து ஆயிரத்து 942 பேருக்கும், செங்கல்பட்டில் 15 ஆயிரத்து 321 பேருக்கும், திருவள்ளூரில் 14 ஆயிரத்து 410 பேருக்கும், மதுரையி 11 ஆயிரத்து 213 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மதுரையைப் பொறுத்தவரை 80 சதவீதம் நோயாளிகள் மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் கண்டிறயப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சியில் செதெருவுக்குத் தெரு இந்தத் தொற்று நோய் இருந்தது. இந்நிலையில் மாநகராட்சி மேற்கொண்ட தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையால் தற்போது தொற்று பரவல் விகிதம் குறைந்துள்ளது.
தற்போது மதுரை மாவட்டத்தில் 2,351 நோயாளிகள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மற்ற அனைத்து நோயாளிகளும் சிகிச்சையில் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பிவிட்டனர்.
அதுபோல் கடந்த 2 மாதமாக தினமும் சராசரியாக 400 முதல் 500 பேருக்கு பரவிய இந்தத் தொற்று நோய் தற்போது குறைந்துள்ளது. 27-ம் தேதி 249 பேரும், 29-ம் தேதி 225 பேரும், 30-ம் தேதி 220 பேரும், 31-ம் தேதி 173 பேரும், 1-ம் தேதி 166 பேரும், 2-ம் தேதி 178 பேரும், நேற்று 106 பேரும் இந்தத் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி தொற்று எண்ணிக்கை மேலும் குறைந்து 97 பேருக்கு மட்டுமே நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 2 மாதத்திற்குப் பிறகு 100க்கு கீழே கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.
மதுரையில் தற்போது கரோனா நோயாளிகள் குணமடைந்து வீட்டிற்கு செல்வதும் அதிகரித்துள்ளநிலையில் தொற்று பாதிப்பு குறையத்தொடங்கியுள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
தமிழகத்தின் முதல் கரோனா உயிரிழிப்பு மதுரை அண்ணாநகரில் நடந்தது. கட்டிடத்தொழில் கான்ட்ராக்டர் ஒருவர், இந்த நோய்க்கு இறந்த நிகழ்வு தென் மாவட்டத்தையே உலுக்கியது.
ஏனெனில் அப்போது கரோனா தொற்றின் பிம்பம் அப்படி கட்டமைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு ஒரளவு கரோனா கட்டுக்குள் வந்தது. சில நாட்கள் ஒற்றை இலக்கத்திலும் சில நாட்கள் தொற்று இல்லாத நாட்களாகவும் மதுரை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு இருந்தது.
திடீரென்று மே மாதம் முதல் கட்டுக்குள் இருந்த கரோனா, கட்டுப்பாடு இழந்து வேகமாகப் பரவியது. அதனால், தினமும் ஒற்றை இலக்கத்தில் பரவிய கரோனா, அதன்பிறகு சராரியாக 500 பேருக்கு பரவத்தொடங்கியதால் சென்னைக்கு அடுத்து அதிகமாக கரோனா பரவும் மாவட்டமாக மதுரை மாறியது. இதில், 80 சதவீதம் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் இருந்தது. தினமும் சராசரியாக 10 நோயாளிகள் இறக்கத் தொடங்கினர்.
அரசு மருத்துவமனையில் படுக்கை வசதியில்லாமல் நோயாளிகள் தரையில் சிகிச்சைப்பெறும் அவலம் ஏற்பட்டது. சிகிச்சைக்கு வராமல் நோயாளிகள் வீடுகளிலேயே இறக்கும் பரிதாபமும் அரங்கேறியது.
இதையடுத்து, அரசு ராஜாஜி மருத்துவமனை மட்டுமில்லாது, தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை, வேளாண்மை கல்லூரி, தியாகராசர் கல்லூரி உள்ளிட்ட 5 இடங்களில் கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.
அலோபதி மருத்துவத்துத்துடன் ஹோமியோ பதி, சித்த மருத்துவ கூட்டு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. மாநகராட்சி நிர்வாகம் 100 வார்டுகளில் 32 இடங்களில் கரோன தொற்று நோய் கண்டறியும் முகாம்களை நடத்தியது.
நடமாடும் வாகனங்களில் சென்று மருத்துவத்துறையினர் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்தனர். 1,500க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்களை நியமித்து, அவர்களை வீடு, வீடாக ஆய்வு செய்ய வைத்து காய்ச்சல் வீடாக மாநகராட்சி இலவசமாக வழங்கியது.
தொற்று ஏற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறாதபடி அவர்களுக்குத் தேவையான மருந்து, காய்கறிகள் மற்றும் அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற ஒவ்வொரு தெருவுக்கும் மாநகராட்சி நிர்வாகம் சுகாதார களப்பணியாளர்களை நியமித்தது.
மேலும், டெலிமெடிசன் திட்டம் மூலம், அறிகுறி இல்லாதவர்கள் வீடுகளில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 24 மணி நேரமும் இந்த டெலிமெடிசன் மருத்துவக்குழுவினர் வீடுகளில் தங்கி சிகிச்சை பெறுவோரை கண்காணித்து அவர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
அதனால், மாநகராட்சிப்பகுதிகளில் எந்தளவுக்கு தொற்று வேகமாகப் பரவியதோ அந்தளவுக்கு தற்போது தொற்று குறையத்தொடங்கியுள்ளது.
அதுபோல், தொற்றில் இருந்து தினமும் குணமடைந்து செல்வோரும் அதிகரித்துள்ளனர். தற்போது அடுத்தக்கட்டமாக ஒவ்வொரு மண்டலத்திலும் ரோட்டரி கிளப் மற்றும் தன்னார்வலர்கள் துணையுடன் கரோனா தொற்று இல்லாத முன்மாதிரி வார்டுகள் உருவாக்கப்பட உள்ளது.