கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கிற்கு மத்தியில் 6500 ஹெக்டேர் பரப்பளவில் கன்னிப்பூ சாகுபடி நெற்பயிர்கள் இடையூறின்றி அறுவடை தருவாயை எட்டி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கரோனா ஊரடங்கால் பிற பகுதிகளைப் போன்றே கன்னியாகுமரி மாவட்டத்திலும் விவசாயிகள் முதல் அனைத்து தரப்பினரும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
குமரியில் பணப்பயிரான ரப்பர், வாழை, தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகளும் போதிய வருமானம் இன்றி சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இவற்றிற்கு மத்தியில் இந்த ஆண்டு ஜீன் மாதம் துவக்கத்தில் இருந்தே கைகொடுத்து வரும் தென்மேற்கு பருவமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
இதனால் முதல் போகமான கன்னிப்பூ நெல் சாகுபடி பரவலாக நடந்தது. கடந்த கும்பப்பூ சாகுபடியின்போது பாதி பரப்பளவில் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது ஊரடங்கிலும் விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் குளத்து பாசனம், ஆற்றுப்பாசனப் பகுதிகளில தாராளமான தண்ணீர் கிடைத்ததால அனைத்து வயல பரப்புகளிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
நடவு செய்த 110 நாட்களுக்குள் அறுவடை நிலையை அடையும் அம்பை 16 நெல் ரகத்தை வேளாண்துறை பரிந்துரை செய்த நிலையில் விவசாயிகள ஆர்வத்துடன் பயிர் செய்திருந்தனர்.
துவக்கத்திலே பயிர் செய்த 1000 ஹெக்டேருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் நெற்கதிர்களுடன் அறுவடை நிலையை எட்டியுள்ளது. எனவே வருகிற ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு பின்னர் அறுவடை செய்ய விவசாயிகள் திட்டமிட்டுளளனர். அதை தொடர்ந்து தாமதமாக நடவு செய்த பயிர்கள் அக்டோபர் மாதம் வரை அறுவடை ஆகவுள்ளது.
ஊரடங்கு நேரத்தில் நெற்பயிர் நல்ல மகசூலுடன் அறுவடை நிலையை எட்டி வருவதால் குமரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து முன்னோடி விவசாயி செண்பகசேகர பிள்ளை கூறுகையில்; கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த கன்னிப்பூ சாகுபடி நெற்பயிர்கள் நல்ல மகசூலை அடையும நிலையில் உள்ளது.
கடந்த ஆண்டு நெல் அறுவடையின்போது அரசு கொள்முதல் நிலைங்களை திறந்து விலை நிர்ணயம் செய்திருந்ததால் ஒரு கிலோ நெல் 18 ரூபாய் 65 காசு எனற அளவில் விற்பனை ஆனது. 87 கிலோ கொண்ட ஒரு கோட்டை நெல் ரூ.1600 வரை விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த ஆண்டும் நெல் பயிரிட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்குமே நல்ல மகசூல் கிடைக்கும் சூழல் உள்ளது. அதே நேரம் ஊரடங்கு நேரத்தில் நெல்களை அரசு, மற்றும் தனியாருக்கு முறையாக விற்பனை செய்து நல்ல விலை கிடைத்திட மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும். முதலில் பயிரிடப்பட்ட பறக்கை ஏலாவில இன்னும் இரு வாரத்தில் அறுவடை தொடங்கவுள்ளது.
இதைத்தொடர்ந்து தெரிசனங்கோப்பு, மணவாளகுறிச்சி பெரியகுளம் ஏலா, தெள்ளாந்தி, இறச்சகுளம், மற்றும் அனைத்து பகுதிகளிலும் நெல் அறுவடை நடைபெறவுள்ளது.
கடந்த இரு ஆண்டுகளில் இல்லாத வகையில் கன்னிப்பூ நெற்பயிர்கள் கைகொடுத்துள்ளதால விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்றார்.