“சுய உதவிக் குழுக்கள் போர்வையில்தான் வந்தார்கள். மகளிர் குழு மூலம் வலை விரித்தார்கள். இப்போது கந்து வட்டிக்காரர்களைவிட இழிவாக நடந்துகொள்கிறார்கள். எங்கள் வீட்டிற்குள் புகுந்து ஆபாசமாகப் பேசி மிரட்டுகிறார்கள்” என்று கதறுகிறார்கள் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சில பெண்கள்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், கொமாரபாளையம் பகுதிகளில் சில தனியார் நிதி நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களில் ஊடுருவி, வங்கிகள் போலவே கடன் கொடுப்பது, பெண்கள் குழுக்களை வைத்தே அதிரடியாக வட்டியும், முதலுமாக வசூல் செய்வதாகவும் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. வட்டியுடன் கடன் செலுத்த முடியாத பெண்களின் வீட்டிற்கு மற்ற பெண்கள் சென்று, வீதியில் நின்று கண்டபடி ஏசி, இழிவுபடுத்திப் பணம் வசூலிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
கரோனா ஊரடங்கு அமலான பின்னர் பிற மாவட்டங்களிலும் இந்தப் பிரச்சினை விஸ்வரூபமெடுக்க ஆரம்பித்துள்ளது. சில வாரங்கள் முன்பு ஈரோடு சத்தியமங்கலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தன. தற்போது இந்தப் பிரச்சினை கோவையிலும் ஊடுருவியிருக்கிறது.
கோவை, ராமநாதபுரம் பகுதியில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் இயங்குகின்றன. இந்தக் குழுவைச் சேர்ந்த பெண்கள் பல்வேறு தனியார் நுண் கடன் (மைக்ரோ பைனான்ஸ்) நிறுவனங்களின் முகவர்கள் மூலம் கடன் பெற்றுள்ளார்கள். கரோனா முடக்கத்தால் வருமானமின்றித் தவிக்கும் இப்பெண்கள் கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் திண்டாடுகிறார்கள்.
அவர்களிடம் நுண் கடன் நிறுவன முகவர்கள் அத்துமீறி நடந்துகொள்வதாகச் சொல்லப்படுகிறது. அப்பெண்களின் வீடுகளுக்குள் நுழைந்து ஆபாசமாகப் பேசுவது, மிரட்டுவது என்பன போன்ற செயல்களில் ஈடுபடுவதாக அவர்கள் மீது புகார்கள் எழுந்திருக்கின்றன. இது சம்பந்தமாக 36 பெண்கள் கையெழுத்திட்டு கோவை ஆட்சியரிடம் நேற்று புகார் மனு அளித்தனர்.
புகார் அளித்த ஜோதிமணி என்பவரிடம் பேசினோம்.
“ராமநாதபுரம் பெருமாள் கோவில் வீதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏகப்பட்ட நுண் கடன் நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் முகவர்கள் மூலம் என்னைப் போன்ற பலரும் கடன் வாங்கியிருக்கிறோம். கடந்த மார்ச் மாதம் வரை சரியாகவே கடன் செலுத்தி வந்திருக்கிறோம். கரோனா வந்த பிறகு கடனைச் செலுத்த முடியாமல் திணறுகிறோம். வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் கட்டாயக் கடன் வசூல் செய்யக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த நிதி நிறுவன முகவர்கள் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. இவர்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம்.
எங்கள் பகுதியில் மட்டும் 250-லிருந்து 300 குழுக்கள் வரை இருக்கின்றன. ஒவ்வொரு குழுவிலும் 15-க்கும் குறையாத பெண்கள் இருக்கிறோம். ஒவ்வொருவர் பேரிலும் லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் இருக்கிறது. இந்தப் பிரச்சினையிலிருந்து எங்களை அரசுதான் காப்பாற்ற வேண்டும்” என்று சொன்னார் அவர்.
இவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ள அனைத்திந்திய மாதர் சங்கத்துப் பெண்கள், “புற்றீசலாய்ப் புறப்படும் நுண் கடன் நிறுவனங்களை அரசு முழுமையாகத் தடை செய்ய வேண்டும். வீடுகளில் புகுந்து அத்துமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் வறுமையில் வாடும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு அரசு வங்கிகளே எளிய முறையில் கடனுதவி வழங்க முன் வர வேண்டும்” என்றனர்.