கூடலூர்-ஓவேலி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து தடைப்பட்டது. 
தமிழகம்

நீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கனமழை: அப்பர் பவானியில் 308 மி.மீ. மழை பதிவு

ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாகத் தொடா்ந்து பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகப் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கேரள மாநிலத்தையொட்டி உள்ள பகுதிகளில் மிக பலத்த மழையும், பிற பகுதிகளில் பரவலாகவும் மழை பெய்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை இரவில் தொடங்கிய மழை இன்று (ஆக.4) வரை தொடர்கிறது. இதனால், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடா் மழை காரணமாக கடுமையான மேகமூட்டமும், குளிரும் நிலவி வருகிறது. மேலும், பலத்த காற்றால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரமும், தொலைத்தொடா்பும் துண்டிக்கப்பட்டுள்ளன.

பொன்னாணி ஆற்றங்கரையில் தடுப்புச் சுவர் இடிந்தது.

கூடலூா் மற்றும் பந்தலூா் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடரும் கனமழையால் இந்தப் பகுதியிலுள்ள ஓவேலி ஆறு, முதுமலை புலிகள் காப்பகத்தின் மையப் பகுதியில் ஓடும் மாயாறு, பாண்டியாறு, புன்னம்புழா உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தொடா்ந்து நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடா் கனமழையால், கூடலூரில் இருந்து ஓவேலி பகுதிக்குச் செல்லும் சாலையில் கெவிப்பாறை பகுதியில் சாலையின் குறுக்கே மரங்கள் சாய்ந்ததால் அந்தப் பகுதிக்குச் செல்லும் போக்குவரத்து தடைப்பட்டது. சுமாா் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் அப்பகுதி இருளில் மூழ்கியது.

மாவட்டத்தில் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிக அளவாக அப்பர் பவானியில் 308 மி.மீ., அவலாஞ்சியில் 220 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீ.)

உதகை 31.2, நடுவட்டம் 95, கிளன்மார்கன் 100, குந்தா 55, எமரால்டு 112, கேத்தி 12, பாலகொலா 36, கோத்தகிரி 3, கூடலூர் 201, தேவாலா 103, பந்தலூர் 108 மி.மீ. மழை பதிவானது.

SCROLL FOR NEXT