எஸ்.பி.வேலுமணி 
தமிழகம்

மற்ற மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணியை சென்னை போலவே செயல்படுத்தலாம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி யோசனை

செய்திப்பிரிவு

அரசின் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளால் சென்னையில் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதேவழிமுறைகள், சிறப்பு திட்டங்களை பிற மாவட்டங்களிலும் பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி யோசனை தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

ஆகஸ்ட் 2-ம் தேதி நிலவரப்படி சென்னையில் கரோனா தொற்றால் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 87,604 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 12,190 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மாநகராட்சியில் மொத்தம் 39,537 தெருக்கள் உள்ளன. இதில் 5,549 தெருக்களில் மட்டுமே கரோனா பாதித்தவர்கள் உள்ளனர். மற்ற 33,988 தெருக்களில் கரோனா பாதிப்பு இல்லை.

அரசின் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மூலம் சென்னையில் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேவழிமுறைகள், சிறப்பு திட்டங்களை பிற மாவட்டங்களிலும் பின்பற்றி வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தலாம்.

மாநகராட்சியில் இதுவரை ஒவ்வொரு 10 லட்சம் பேரிலும் 87 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தினமும் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. குடிசைப் பகுதி மக்களிடையே வைரஸ் தொற்று கண்டறியப்பட்டால், அவர்களோடு தொடர்பில் உள்ளவர்களை தனிமைப்படுத்த 30 ஆயிரம் பேர் தங்கும் வசதி கொண்ட மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

தினமும் 500-க்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அவற்றில் இதுவரை 15.39 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இவர்களில் 81,318 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஆர்.காமராஜ்,சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், க.பாண்டியராஜன்,ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலர் ஹர்மந்தர் சிங், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT